மலாயா புலியைப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக விளங்கும் மலாயா புலியைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா தொடக்கி வைத்தார். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. இதர உயிரினங்களையும் இறைவன்தான் படைத்தார். அவைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்தப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1950ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மலேசியாவில் 3,000 புலிகள் இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை வெறும் 200 மட்டுமே. இந்நிலை தொடர்ந்தால் மலாயா புலி அழிந்த உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடும் என்பதையும் அவர் சீட்டிக்காட்டினார்.மலேசியாவின் அடையாளமாக விளங்கும் மலாயா புலியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மலேசியர்கள் அனைவருக்கும் உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நீர், நிலம், இயற்கை வளம் அமைச்சுக்கும் அதன் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருக்கும் தாம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா குறிப்பிட்டார். மலாயா புலியைப் பாதுகாக்கும் இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். மலாயா புலியின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு இந்தப் பிரச்சாரம் பெரிதும் துணை புரியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு அண்மையில் தாமான் நெகாராவில் உள்ள மலாயா புலி மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது தமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இரண்டு ஆண் புலிகளுக்கு வீரா, ஹேபாட் எனத் தாம் பெயர் சூட்டி உள்ள நிலையில் பெண் புலிக்கு மெலோர் என பெயர் வைத்திருப்பதாகவும் அவர் கூறியபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.முன்னதாக 2010ஆம் ஆண்டு உலகளாவிய புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருவதாக நீர், நிலம், இயற்கை வளம் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.ஜூலை 29ஆம் இந்நாள் உலகளாவிய புலிகள் தினம் எனக் கொண்டாடப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். உலக நாடுகள் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதாகவும் 2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் முடிவு செய்திருப்பதையும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.சட்டவிரோதமாக வேட்டையாடி அதன் காரணமாக மலாயா புலியின் எண்ணிக்கை அதிக  அளவில் குறைந்துள்ளது. இப்போது அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை நாம் எடுக்கத் தவறினால் மலேசியாவின் அடையாளமாக விளங்கும் புலியை காலப்போக்கில் நாம் இழந்து விடுவோம் என்பதையும் டாக்டர் சேவியர் ஜெயகுமார் நினைவுறுத்தினார்.

இதனைக் கருத்தில் கொண்டு மலாயா புலியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பகாங் மாநிலத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய புலிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு இருப்பதையும் டாக்டர் சேவியர் தெரிவித்தார்.முன்னதாக மலாயா புலியைப் பாதுகாப்பதற்காக புதிய நிதி திட்டமிடல் தொடங்கப்பட்டு இருப்பதையும் அவர் தெரிவித்தார். இதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து இயக்கங்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இதன் அறிமுக விழாவில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 800 வெள்ளி திரட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here