கங்கா ஸ்ரீதர் அபார ஆட்டம் 5 ரன் வித்தியாசத்தில் டிராகன்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது சூப்பர் கில்லீஸ்

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரின் குவாலிபயர்-1 தகுதிச்சுற்று ஆட்டத்தில், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை போராடி வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக  முன்னேறியது.
டிஎன்பிஎல் டி20 தொடரின் நடப்பு சீசனில் மொத்தம் 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதின. ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளில் விளையாடிய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த  திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), சூப்பர் கில்லீஸ் (10), மதுரை பேந்தர்ஸ் (10), காஞ்சி வீரன்ஸ் (8) அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது.  தொடக்க வீரர் கங்கா தர் ராஜு அதிகபட்சமாக 81 ரன் (54 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். சசிதேவ் 26, கோபிநாத் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர். முருகன் அஷ்வின் 14 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டிராகன்ஸ் பந்துவீச்சில் பிரானேஷ், ஹரி சாய்நாத் தலா 2, ஆர்.அஷ்வின், சிலம்பரசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. ஹரி  நிஷாந்த் 29, ஜெகதீசன் 37, கேப்டன் ஆர்.அஷ்வின் 22, விவேக் 20, சுமந்த் ஜெயின் 13, சதுர்வேத் 14, ரோகித் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பரபரப்பான கடைசி ஓவரில் டிராகன்ஸ் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்ட நிலையில், 15 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 2 பந்துகளை முகமது சிக்சருக்கு தூக்கியும் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. டிராகன்ஸ் அணி 20 ஓவர்  முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முகமது 18 ரன், பிரானேஷ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சில் பெரியசாமி 3, எம்.அஷ்வின், ஹரிஷ் குமார்  தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கங்கா ஸ்ரீ தர் ராஜு ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2017ம் ஆண்டு சாம்பியனான சூப்பர் கில்லீஸ் அணி, நடப்பு சீசனின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறியது. தோல்வியைத் தழுவிய டிராகன்ஸ் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது.  காஞ்சி – மதுரை அணிகளிடையே நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் டிராகன்ஸ் அணி நாளை குவாலிபயர்-2 ஆட்டத்தில் மோதும்.அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பைனலில் சூப்பர் கில்லீசை எதிர்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here