தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்.
இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்து வருகிறார். சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற பெருமை உடையது. காவிரி நதி, இங்கே சற்றே திரும்பி வலமாக வளைந்து பாய்வதால் இவ்வூர் திருவலம்சுழி என பெயர் பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் ஸ்வேத விநாயகரது தும்பிக்கை வலப்புறமாக வளைந்திருப்பதும் இப்பெயர் வர காரணம் என கூறப்படுகிறது.

கோயில் வரலாறு: இந்திரன் வழிபடும் தலம் ‘ஸ்வேத’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘வெள்ளை’ என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இது எனக் கூறப்படுகிறது. ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால் தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார்.
அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். சின்னஞ்சிறு மூர்த்தி விநாயகர் கடல் நுரையால் செய்யப்பட்டதால் எந்தவித அபிஷேகமும் இங்கு பிள்ளையாருக்குச் செய்யப்படுவதில்லை. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும்.