ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் செரீனாவுடன் பியான்கா மோதல்

டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகிறார்.

கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரை இறுதியில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவுடன் (91வது ரேங்க்) மோதிய செரீனா 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுஸ்கோவாவின் சவாலை முறியடித்த அவர் 6-3, 6-3 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் சோபியா கெனினுடன் மோதிய கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் 2 மணி, 11 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். 1969க்குப் பிறகு  ரோஜர்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் கனடா வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. பைனலில் சாதனை வீராங்கனை செரீனாவுடன் (37 வயது), உள்ளூர் நட்சத்திரம் பியான்கா (19 வயது)  மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடால் முன்னேற்றம்: கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி  பெற்றுள்ளார். அரை இறுதியில் அவருடன் மோதவிருந்த கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் 6-1, 7-6 (8-6) என்ற நேர் செய்ட்களில் சக வீரர் கரென் கச்சனோவை வீழ்த்தினார். பைனலில் நடால் – மெட்வதேவ் மோதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here