நோரா கற்பழிக்கப்படவில்லை; உணவில்லாமல் குடல் வெடித்து இறந்துள்ளார் – பிரேத பரிசோதனை முடிவு

சிரம்பான், ஆகஸ்ட் 15 – 10 நாட்களாக காணமல் போன அயர்லாந்து நாட்டு பெண் நோராவின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்தை அடுத்து, நேற்று காலை அந்த சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவு  இன்று மதியம் 2 மணியளவில் நெகிரி செம்பிலான் போலிஸ் தலைமையகத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த முடிவில், கண்டெடுக்கப்பட்ட சடலம் நோராவுடையதுதான், அவர் அண்மையில் 2லிருந்து மூன்று நாட்களுக்கு முன்புதான் இறந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளதாக நெகிரி செம்பிலான் போலலீஸ் படைத் தலைவர் டத்தோ முகமட் மாட் யூசோவரி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

நோரா இறந்ததற்கான காரணம் என்ன என்று கேட்ட போது “ நீண்ட நாட்களாக உணவில்லாமல் இருந்தது மற்றும் அதிகபட்ச மன அழுத்தத்தினால் அவரின் குடல் வெடித்துள்ளதாகவும் அதனால்தான் நோரா இறந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என மாட் யூசோவ் குறிப்பிட்டார்.

மேலும் நோரா கற்பழிக்கப்பட்டதற்கான அடையாளம் எதுவும் அவரது உடலில் இல்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார். அவரின் உடலில் சிறிய சிராய்ப்பு காயங்கள் உள்ளன. ஆனால் அவை கற்பழிக்கப்பட்டதற்கான அடையாளமோ அல்லது அந்தக் காயங்களால்தான் அவர் இறந்தார் என்பதில் உண்மையில்லை எனக் கூறினார்.

நோராவின் உடலை அவரது பெற்றோர் எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவரது பெற்றோர்கள் மலேசியாவில் தங்கியிருக்கலாம் அல்லது அவர்கள் நாட்டிற்கு திரும்பலாம் என்றும் தெரிவித்தார்.

‘ஸ்லொவ் லேர்னிங்’  எனும் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது நோரா ஆகஸ்டு 4ஆம் திகதி  காணாமல் போய் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பத்தாவது நாள் பிற்பகல் 1.57 மணியளவில் நோரா காணமல் போன இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் 1.2 கிலோ மீட்டர் பள்ளத்தில் சடலம் ஒன்று கிடப்பதை  தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வள சிரம்பான் மலை ஏறும் குழுவினர் கண்டுபிடித்தனர்.

நோராவின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மலேசிய இராசயணத் துறைக்கு அனுப்பப்படும் என்றும் அவரின் மரணம் குறித்து மேல் விசாரணை நடத்தப்படும் என்றும் மாட் யூசோவ் தெரிவித்தார்.

நோராவின் மரணம் குறித்து உலகளவில் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here