இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து அணியில் புதிய பயிற்சியாளராக விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தது. விண்ணப்பிக்காமலேயே பயிற்சியாளர் தேர்வுக்கு ரவி சாஸ்திரியும் தகுதி பெற்றுள்ளார்.

இந்த விண்ணப்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான டாம் மூடி, இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரரும், தற்போதைய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புத் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகிய 6 பேரையும் பிசிசிஐ இறுதி செய்தது.

அவர்கள் 6 பேரிடமும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று நேர்காணல் செய்கிறது. இதற்காக ராபின் சிங் உள்ளிட்டோர் மும்பை சென்றுள்ளனர்.

தற்போது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் உள்ள தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி காணொலி காட்சி மூலம் நேர்காணலில் பங்கேற்பார் என்று தெரிகிறது. 6 பேரிடமும் நேர்காணல் முடிந்தவுடன் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்ற விவரம் குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றனர். அத்துடன் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் யார் என்பதையும் தேர்வுக்குழு அறிவிக்கிறது.

ரவிசாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு

ரவி சாஸ்திரியை பொறுத்தவரை அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 70 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது, 2 ஆசிய கோப்பை தொடர்களை வென்றது, உலக கோப்பையில் அதிக ரன்களை எடுத்து அசத்தியது என இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

ஆனாலும், தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது, உலக கோப்பையில் அரை இறுதியிலேயே வெளியேறியது மட்டுமே ரவி சாஸ்திரிக்கு பின்னடைவாக இருக்கிறது. மொத்தத்தில் அவரது பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது. எனவே ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பிசிசிஐ நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here