போர்ட் ஆப ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
வெஸ்ட் இண்டீசுடன் தலா 3 டி20, ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. அடுத்து ஒருநாள் தொடரில் பிராவிடெண்சில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. அடுத்து போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2வது போட்டியில் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியும் நேற்று முன்தினம் இரவு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதலில் களமிறங்கியது, தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கேல், எவின் லூயிஸ் அதிரடியில் முதல் விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது. அணியின் ஸ்கோர் 22 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்னாக இருந்த போது மழை குறுக்கீட்டது.
அதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் 35 ஓவராக குறைக்கப்பட்டது. அதனையடுத்து களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரார்கள் ஸ்கோரை கணிசமாக உயர்ததினர். அதனால் ஆட்ட நேர முடிவில் 35 ஓவரில் 7 விக்கெட்கள் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 240 ரன் எடுத்தது. கலீல் அகமது 3, முகமது ஷமி 2, யஜ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறையில் 35 ஓவரில் 255 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் கண்டது. தொடக்க ஆட்டக்கார்கள் ரோகித் சர்மா -10, ஷிகர் தவான்- 36 ரன்களில் வெளியேறினர். பேபியன் ஆலன் பந்து வீச்சில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமான ரிஷப் பண்ட் வழக்கம் போல் டக் அவுட்டனார்.
ஆனால் 2வது போட்டியில் அசத்திய விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யரும் இந்தப் போட்டியிலு–்ம் அசத்தினர். கோஹ்லி ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரிகளுடன் 114 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 5 சிக்சர், 3 பவுண்டரிகள் உட்பட 41 பந்துகளில் 65 ரன் எடுத்தார். கோஹ்லிக்கு இது ஒரு நாள் போட்டியில் 43வது சதமாகும்.இந்த இருவரின் அதிரடியால் இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனால் ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.