இரு மடங்கான ‘டெஸ்ட்’ சவால்.. கோஹ்லி கணிப்பு

ஆன்டிகுவா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகி உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளின் சவால் இரு மடங்காகிவிட்டதாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்க விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கோஹ்லி, இது குறித்து நேற்று கூறியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகி உள்ளதால், அனைத்து அணிகளுமே டெஸ்ட் போட்டியில் அதிக  கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன.

இதனால் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஐசிசி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது. ரசிகர்களுக்கு டெஸ்ட் மீதான ஆர்வம்  குறைந்துவிட்டது.

டெஸ்ட் போட்டிகள் விரைவில் அழிந்துவிடும் என்று பேசப்பட்டு வந்த நிலை மாறி இப்போது கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றிகளைக் குவிப்பதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.  இனி யாரும் டிரா செய்வதற்காக விளையாட மாட்டார்கள்.

அதிக புள்ளிகள் வேண்டும் என்றால் வெற்றி அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளோம். பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்கள் தான் அதிக கவனமாக விளையாட  வேண்டியிருக்கும். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்தவர்களில் எம்.எஸ்.டோனி 60 டெஸ்டில் 27 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த  சாதனையை சமன் செய்ய கோஹ்லிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை 46 டெஸ்டில் 26 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here