திருப்பி அனுப்பப்பட்ட கல்வி நிதி!

சர்ச்சை

ஒவ்வோர் ஆண்டும் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகவும் பல்வேறு பணிகளுக்காகவும் நிதி மற்றும் மானியங்கள் ஒதுக்கப்படும். இப்படி ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மானியங்கள் அந்தந்த துறைகள் முறையாக செலவிட்டுள்ளனவா என்று சரிபார்க்க இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் மாநில நிதிநிலை மீதான தணிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இந்த நடைமுறைப்படி கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிந்த ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் பள்ளிக் கல்வித்துறையில் செலவிடப்பட்ட நிதியை தணிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டில் வருவாயில் அனுமதிக்கப்பட்ட மானியத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.894 கோடி, இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்
படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.437 கோடி, சிறப்புக்கூறு திட்டத்தின்கீழ் அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.296 கோடி ஆகியவற்றை உபயோகிக்கவில்லை. அதனால் மேற்கண்ட ரூ.1,627 கோடி நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திரும்ப ஒப்படைத்த நிதியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி களுக்கு அடிப்படை வசிதிகளை செய்திருக்கலாமே… ஏன் திருப்பி அனுப்பப்பட்டது? என்று கேட்டதற்கு, தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுச் சங்க நாகப்பட்டினம் ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம் தெரிவிக்கும் தகவல்களைப் பார்ப்போம்… ‘‘இன்று ஊடகங்கள், சமூக ஊடகங்கள், பொதுவெளி என அனைத்து தளத்திலும் கல்வி, கல்வித் துறை, கல்விக் கொள்கை, அரசுப் பள்ளிகள் பேசும் பொருளாக மாறியிருக்கும் சூழ்நிலை வரவேற்கத்தக்கது. தற்போது 2018 மார்ச் 31 முடிந்த நிதித்தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. இதைப்பற்றி விவாதங்கள் சில நாட்களாக நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வேறு பரபரப்புச் செய்தி வந்தவுடன் இது மறந்துவிடும்.

தணிக்கை அறிக்கை சொல்லும் விஷயம் இதுதான். மத்திய அரசு தமிழக அரசின் கல்வித்துறைக்காக 2500 கோடி அளித்தது. அதில் 873 கோடியை மட்டும் செலவழித்துவிட்டு மீதமுள்ள 1,627 கோடி ரூபாயை செலவழிக்காமல் மத்திய அரசிடம் தமிழக அரசு கடைசி நாளில் திரும்ப ஒப்படைத்துள்ளது.

தமிழக அரசு பிப்ரவரி 2019 தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்காக ஒதுக்கீடு செய்த தொகை 28758 கோடி. அதாவது, ஒரு நிதி ஆண்டில் கல்விக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையில் 6% செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதை சிக்கனமான அரசு நடவடிக்கை என்று கூறி பாராட்ட ஆசையாகத்தான் இருக்கிறது. நம்முடைய கல்வித் தேவைகள் அனைத்தும் நிறைவேறி தன்னிறைவு பெற்ற நிலையில் நிதியை திரும்ப ஒப்படைத்திருந்தால் அவ்வாறு கூறலாம்.’’ என்று ஆதங்கத்தோடு மேலும் பல பிரச்னைகளைப் பட்டியலிட்டார் பாலசண்முகம்.

‘‘ஒரு பக்கம் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அரசிடம் நிதி இல்லை. எனவே, தொழிலதிபர்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகிறது. மறுபக்கம் தமிழகத்திலிருந்துதான் அதிக ஜிஎஸ்டி மற்றும் கல்வி வரி மத்திய அரசுக்கு செலுத்தப்படுகிறது என்ற குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதவில்லை என்ற கோரிக்கை வலுக்கிறது. இவ்வளவு பிரச்னையில் ரூ.1,627 கோடி ரூபாயைக் கல்வித்துறை திரும்ப ஒப்படைத்துள்ளது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

இந்த ரூ.1,627 கோடியை திரும்ப ஒப்படைத்துவிட்டார்கள் என்று கூப்பாடு போடும் அதே நேரத்தில் நம்மிடம் அதற்கான தீர்வு இருக்கிறதா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.’’ என்கிறார். ‘‘இந்த ரூ.1,627 கோடியை எப்படி கல்வித்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலரிடம் கலந்துரையாடினேன். அவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். அவற்றில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன்.

* மாணவர்களுக்கு அடிப்படைத் தேவையான சுகாதாரத்திற்கு அவசியமான கழிவறை வசதி, மற்றும் சுத்தம் செய்வதற்கான பினாயில், கை கழுவும் சோப்பு உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை பள்ளிகளுக்கு வழங்கலாம். குடிநீர் வசதி செய்து கொடுக்கலாம்.

* பள்ளிகளின் அடிப்படைத் தேவையான கரும்பலகை பூச்சுக்கான பெயின்ட் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கலாம். கணினி, மின் விசிறி, பள்ளிகளில் பிரார்த்தனை மற்றும் கூட்டங்களில் அறிவிப்பு செய்திட மைக், ஒலிபெருக்கி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கலாம்.

* ஏழைப் பெற்றோர்கள் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர். இதைப் போன்ற பள்ளிகளில் மாவட்டத்திற்கு ஒன்றை தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கலாம்.

* பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்படும்போது முதலுதவி சிகிச்சை செய்வதற்கான பேன்டேஜ், டிங்ச்சர், ஆயின்ட்மென்ட் உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. பருவத்திற்கு ஒரு முறை இப்பொருட்களை
பள்ளிகளுக்கு வழங்கலாம்.

* புதியதாக அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கலாம்.

* வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகளின் பங்கேற்பு குறைகின்றது. மாணவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யலாம்.

* அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடம் கற்பிப்பதற்கான அச்சிடப்பட்ட பெரிய வண்ண சார்ட்டுகள் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. பாடத்திட்டத்திற்கு இவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கினால் கற்பித்தல் மேம்படும்.

இவை அனைத்தும் நிதியை எப்படியாவது செலவழித்தே ஆகவேண்டும் என்பதற்காக மூளையை கசக்கி கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. மேற்கூறிய ஆலோசனைகளில் குறைந்தபட்சம் 5 விஷயங்களாவது ஒவ்வொரு பள்ளியிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அது ஆசிரியர்களின் முயற்சியிலும் கைப்பணத்தை செலவு செய்தும்தான் சாத்தியமாகிறது. மாறாக இதை செய்ய வேண்டியது அரசின் கடமைதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்கூறிய ஆலோசனைகளை நடைமுறையில் கொண்டுவருவதில் சிரமங்கள், சட்ட சிக்கல்கள் இருக்கலாம். அவற்றை களைந்து, நிதியை திருப்பி அனுப்பாமல் அதைக்கொண்டு, இதுபோன்று மாணவர்கள் பயன்பெறும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்தால் கூட மாணவர்களின் மனம் மகிழ்ந்திருக்கும்.

சாதாரணமாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தாலே ரூ.1,627 கோடி நிதியை திரும்ப ஒப்படைக்காமல் பயனுள்ள வகையில் செலவிட்டிருக்கலாம். ஏதோ கல்வித்துறை மட்டும் இவ்வாறு நிதியை பயன்படுத்தாமல் திருப்பி ஒப்படைக்கவில்லை. தமிழக அரசின் கீழ் உள்ள 35 துறைகள் 2018 மார்ச்சில் ஒட்டுமொத்தமாக திருப்பி அனுப்பிய தொகை ரூ.28,000 கோடி. இந்த ஆண்டு மட்டும் இக்கொடுமை நடைபெறவில்லை. 2013 தொடங்கி 2018 வரை 5 ஆண்டுகளில் தமிழக அரசு பயன்படுத்தாமல் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்த தொகை ரூ.1.02 லட்சம் கோடி. சரியான திட்டமிடலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லாத நிலையைக் கண்டு வருந்துவது தவிர ஒரு வரி செலுத்தும் குடிமகனாக வேறென்ன செய்ய முடியும்?’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here