தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும்!

 ஆலோசனை

தேசியக் கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கை வெளியானதிலிருந்து அது குறித்த விமர்சனங்கள் அனைத்து வகை ஊடகங்களிலும் வந்தவண்ணமிருந்தன. ஆனாலும் நடிகர் சூர்யா அது குறித்து கருத்து தெரிவித்த பிறகு கல்விக்கொள்கை பற்றிய விமர்சனங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவின் கல்விக்கொள்கையை வடிவமைப்பது மிகப்பெரிய சவாலான பணி.

அப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினரை பாராட்டத்தான் வேண்டும். ஆனாலும் இந்தியாவின் தனித்தன்மையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதேயாகும். பல்வேறு மொழி பேசும் மாநிலங்களை உள்ளடக்கிய வெவ்வேறு பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தேசிய அளவில் ஒரே கல்விமுறை என்பது நெருடலாக உள்ளது.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்பது மாநிலங்களின் நீண்டகாலக் கோரிக்கை. ஆனால், இந்த வரைவறிக்கை ஒரே நாடு ஒரே கல்வி என்பதை வலியுறுத்தும்வண்ணம் அமைந்துள்ளது. ஒரு மாநில அரசு அங்கு வாழும் மக்களுக்கான கல்விமுறையை வடிவமைப்பதே முறையாகும். கல்வியில் மாநில உரிமையைப் பறிப்பதாக உள்ளது தேசியக் கல்விக்கொள்கை. தமிழகத்திற்கான கல்வியைக் கன்னடர்கள் தீர்மானிக்க முடியாது. இந்தக் குழுவில் நாடு தழுவிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரை இந்தியக் கல்விக்கொள்கையை வடிவமைக்க நியமித்தது ஏன்? இக்குழுவில் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதி ஒருவராவது இடம்பெற்றிருக்கவேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவசரகதியில் கல்விக்கான கொள்கையை வடிவமைத்திருப்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. வணிகத்துறைகளில் நிலவும் உலகமயமாக்கல் போக்கு கல்வித்துறையிலும் கால்பதிக்க வழிவகுத்திருக்கிறது இக்கொள்கை அறிக்கை.

கல்வியில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல மாற்றங்கள் மீண்டும் இந்தியர்களைப் பழங்காலத்திற்கே கொண்டுசேர்க்கும். 10+2+3 என்று தற்போது உள்ள கல்விமுறையில் 15 ஆண்டுகளில் ஒருவர் பட்டம் பெற்றுவிடலாம். ஆனால், தற்போது இம்முறை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. 5+3+3+4 என்னும் புதிய முறையில் ஒருவர் பள்ளிக்கல்வியை முடிப்பதற்கே 15 ஆண்டுகள் ஆகும்.

முதல் 5 ஆண்டுகள் என்பது அடிப்படை நிலை. இது மூன்றாண்டு மழலையர் வகுப்போடு 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளை உள்ளடக்கியது. அடுத்த 3 ஆண்டுகள் ஆயத்த நிலை. இது 3,4,5 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கியது. அடுத்த 3 ஆண்டுகள் நடுநிலை. இது 6,7,8 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கியது. அடுத்த 4 ஆண்டுகள் உயர்நிலை. இது 9,10,11,12 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கியது. 3 வயதில் மழலைக்கல்வி என்பது குருவி தலையில் பனங்காயை வைப்பது போலாகும். மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது இந்த முறையால் அதிகமாகுமே தவிர குறையாது.

உலகின் மிகச்சிறந்த கல்விமுறையாகப் பின்லாந்து கல்விமுறை பலராலும் குறிப்பிடப்படுகிறது. அந்த நாட்டில் 7 வயதில்தான் குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்கின்றனர். அதனால்தான் அங்கு குழந்தைகள் மகிழ்வோடு கற்றுக்கொள்கின்றனர். மகிழ்ச்சியான கற்றலே முழுமையான கற்றலுக்கு அடிப்படையாக அமைகிறது. உலக அளவில் பின்லாந்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.

யுனெஸ்கோ நிறுவனம் வலியுறுத்துகிறது என்பதற்காக அறிக்கையின் முதல் இயலிலேயே ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (ecce) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்புடையதன்று. கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பம். கல்வியை அரசு மட்டுமே வழங்கினால்தான் இவர்கள் முழங்கும் இலவசக் கல்வி சாத்தியமாகும். கல்வியில் தனியார் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதாகவே கொள்கை அறிக்கை அமைந்துள்ளது. குருகுலக் கல்வி, திண்ணைப்பள்ளி போன்றவற்றை மீண்டும் ஏற்பது எதற்காக? மக்களை பின்னோக்கி இழுப்பது நியாயமா?

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை ஒருங்கிணைத்து கல்வி வளாகம் ஏற்படுத்தப்படும். அந்த வளாகத்திற்கு மாணவர்கள் செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடுகிறது அறிக்கை. அது எப்படிப்பட்ட போக்குவரத்து என்பதுதான் நகைச்சுவை. பெரிய பெண்குழந்தைகள் அவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டியில் குழுவாக குழந்தைகளை அழைத்துச் செல்லவேண்டும். நடந்து செல்லும் பெண் குழந்தைகளுக்கு காவலர்கள் பாதுகாப்பாக வருவார்களாம்.

அல்லது சமூக ஒத்துழைப்புடன் ரிக்‌ஷா போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்களாம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதைப் போலல்லவா உள்ளது. குடிமக்களுக்குக் கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. இதில் லாப நட்டக் கணக்குகளைப் பார்க்கக்கூடாது. 10 மாணவர்கள் படித்தாலும் அவர்களுக்காக பள்ளியை நடத்தவேண்டும். அருகமைப்பள்ளிமுறை என்பதை நீண்ட காலமாக வலியுறுத்திவரும் சூழலில் மீண்டும் மாணவர்களைக் கல்விக்காகப் பயணிக்க வைப்பது ஏற்புடையதன்று.

பிரதமரைத் தலைவராகக்கொண்டு உருவாக்கப்படும் தேசியக் கல்வி ஆணையம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் முயற்சி. எனவே, நாடு தழுவிய மக்களின் கருத்துகளை ஏற்று நவீன காலத்திற்கு ஏற்ற புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வி அவரவர் தாய்மொழியில்தான் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வது அவரவர் விருப்பம். யாரையும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள வலியுறுத்தக்கூடாது. மருத்துவக் கல்விக்கு NEET தேர்வு போல பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பை பறித்துவிடாதீர்கள்.

கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதை வெற்று முழக்கத்தால் மட்டுமே நிறைவேற்றிவிட முடியாது. அதற்கான செயல் வடிவத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கல்விக்கொள்கை உதவாது. கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று புதிய அறிக்கை வெளியிடப்படவேண்டும். அதற்கான முன்முயற்சி எடுக்கவேண்டிய ஆசிரியர் சங்கங்கள் வாய் மூடிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது. நமக்கான கல்விக்கொள்கைகளை நாம்தானே வடிவமைக்க வேண்டும். நம் உரிமையை விட்டுக்கொடுப்பது ஏற்புடையதாகாது. பள்ளிக் கல்லூரிகள்தோறும் தேசியக் கல்விக்கொள்கையில் எத்தகைய மாற்றங்கள் தேவை என விவாதித்து அரசை நிர்பந்திக்கவேண்டும். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகள் இதில் தீவிர கவனம் செலுத்திவருவது ஆறுதலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here