பொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்

ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப் பெருமான். முருக பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம்.

முருகப் பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில் ஆவணி தேய்பிறை சஷ்டி தினத்தன்று முருகப்பெருமானை எவ்வாறு விரதமிருந்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத தேய்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும். அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

மேலும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இந்த முறையில் ஆவணி மாத தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். நேரடி மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here