வாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்

பசுமை இயற்கையின் வண்ணம், எங்கும் நிறைந்திருப்பது. 7 வண்ணங்களில் நடுவான வண்ணமாகும். அந்தப்பச்சை வண்ணத்துக்கும் செழுமைக்கும் வளமைக்கும் காரணமாய் இருப்பவள் பச்சையம்மனும் காத்தாயியம்மனும் ஆவர். ‘‘உலகைக் காக்க பச்சையம்மனும் உறவைக் காக்க காத்தாயியும்” என்பது பழமொழி மொத்த உலகை பச்சையம்மன் காத்தாலும் குடும்ப உறவைக் காத்து வம்சம் விளங்க வைப்பவள் காத்தாயி எனப்படும் அம்மனாகும். உமையம்மை காசி மாநகர் சென்று அன்னபூரணியாகி அறம் செய்து கொண்டிருந்தாள். சிவன் யோக பூமியான காசி விட்டு மோக பூமியான காஞ்சி செல்வாய் எனக் கூறினார்.

அதன்படி ஒவ்வொரு சிவத்தலமாக தரிசனம் செய்து சிவராஜதானி என அழைக்கப்படும் நாகப்பட்டினம் வந்து தவச்சாலை அமைக்க இடம் தேடச் சொன்னாள். நாகப்பட்டினம் மேலைக் கோட்டை வாயிலருகே வந்தபோது அம்பாளின் தவக் கோலத்தையும் அருட் கோலத்தையும் கண்டு அவளை வருந்தி அழைத்து அவளது சொந்த வீட்டைப் போல் வந்து தங்க வேண்டுமென ஒரு குடும்பம் அழைத்தது. தவச்சாலைக்கு இடம் தேடிவர வெகுநேரமாகி விட்டதால் அதனைத் தன் தாய் வீடாக நினைத்துக் கொண்டு ஒரு பொழுது தங்கினாள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் ஓடும் வெள்ளாற்றங்கரையில் மகிழ மரமும் மாவிலங்க மரமும் அடர்ந்து இருந்த செழித்திருந்த ஒரு வனத்தில் இருந்து தவம் செய்தாள்.

அம்பாள் வனத்தில் தவத்தில் இருப்பதால் அவ்விடத்திற்கு அனைத்து முனிவர்கள் வந்தனர். ஈஸ்வரியை வேண்டி உலகில் உள்ள உயிர்கள் தடையின்றி வாழ்வதற்காக அருள் செய்ய வேண்டினர். மகிழ மரத்தடியில் தன் பரிவாரங்களோடு தவம் செய்து கொண்டிருந்த மரகதாம்பிகையை நாகப்பட்டினத்தில் ஒரு பொழுது தங்க வைத்த அந்தக் குடும்பம் முழுவதும் தவம் செய்து முடிக்கும்வரை அருகிலே நின்று அம்மையை மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது பக்தி அதிகமாகி இடைவிடாமல் தொழுது தன் சொந்த மகளைப்போல் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

தன் வீட்டிலிருந்து தன் மனைவி மக்களை அழைத்து வந்து அம்பாளுக்குத் தொண்டும் அங்கிருக்கும் வரையும் மகளைப்போல் பாவித்து பணிவிடைகளும் செய்து வந்தனர். இப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த வேளாள குலங்களைச் சேர்ந்தவர்கள் உடனிருந்து உமை பூஜைக்கு வேண்டிய பொருட்களும் புஷ்பங்களும் புனலும் தேவைப்படுபவையும் தேடிக்கொண்டு வந்து கொடுத்து உதவும் பணியும் செய்து கொண்டிருந்தனர். யாகசாலைக்கு வெளியே அக்னி வீரன், லாட வீரன் வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி போன்றோர் காவலாக தங்கள் பரிவாரங்களுடன் நின்றனர்.

தேவி காஞ்சி சென்று கம்பை நதிக்கரையில் தவம் செய்யப்போவதை தெரிவித்தாள். உள்ளூர் மக்கள் அனைவரும் தாங்கள் இத்தலத்தைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் அங்கேயே குடிகொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். இதன் காரணமாக தேவி, தன் தவவேள்வி முடிந்தும், கைலாயம் செல்லாமல் மன்னார் சாமி என்ற பெயர் கொண்ட ஈசனுடன் மகிழ மர வனமான மகிழி என்னும் தலத்தில் தன் படை பரிவாரங்களுடன் தன் மறு சக்தியான காத்தாயியுடன் பச்சையம்மனாக வந்து குடியேறி பக்தர்களுக்கு அருள் புரிந்து வரலானாள். மேலும் இந்த இடத்திற்கு வந்து வழிபடுவோர் நிரந்தர ஆனந்தம் பெறுவார்கள் என்பதால் இது ஆனந்தபுரம் என இனி அழைக்கப்படும் எனவும் தெரிவித்தாள்.

ஆனந்தபுரமே மருவி அனந்தபுரமாக அழைக்கப்படுகிறது. அன்று முதல் அனைவராலும் மகிழ்ச்சியைத் தரும் ஆனந்தபுரம் மகிழி என அழைக்கப்படுகிறது. பச்சையம்மன் சந்நதி வாயிலுக்கு நேரிலும் அதன் இடது புறம் காத்தாயி அம்மன் சந்நதியும் உள்ளது. காத்தாயி அம்மன் சுதை உருவில் இரு கரங்களுடன் வலக்கரத்தில் கிளியுடனும் இடக்கரத்தில் கந்தனை குழந்தை வடிவில் ஏந்தியவளாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். திருக்கோயிலின் பிரதான சந்நதியாக இருக்கும் பச்சையம்மன் பாசம் அங்குசம் வரதம் அபயத்துடன் பச்சை வண்ணத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

பச்சையம்மனுக்கு பச்சரிசி வெல்லம் சேர்த்த பொங்கலும் காத்தாயி அம்மனுக்கு மாவிளக்கு போடுதலும் வாழ் முனீஸ்வரனுக்கு பால் பொங்கல் வைத்தலும். கோயில் வளாகத்துக்கு வெளியே உள்ள பெரியாச்சி அம்மனுக்கு கோழிமுட்டை கருவாட்டுக் குழம்பு போன்ற அசைவ சமையல் படைத்தலும் வழக்கத்தில் உள்ளன.  வருடத்திற்கு ஒருமுறை 15 நாட்கள் பச்சையம்மன், காத்தாயி அம்மன் இந்தக் கோயிலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தாய் வீட்டிற்கு சென்று விடுவதால் கோயிலில் பூஜை போன்றவை நடைபெறுவதில்லை. அம்மன் முதன் முதலில் நாகப்பட்டினத்தில் வந்து மேலக்கோட்டை வாயிலில் தங்கியதால் அந்நாள் முதல் கோயிலில் இருந்து அங்கு எழுந்தருளுவதாக ஐதீகம் உள்ளது.

ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கோயிலிலிருந்து செல்லும்போது பூச்சொரிதல் செய்து வாழ்த்துப்பாட்டு போற்றிப்பாட்டுப்பாடி அனுப்பி வைப்பது வழக்கம் அன்று முதல் 15 நாட்கள் நாகப்பட்டினம் சென்று தங்குவதாகவும் அதன்பிறகு அங்கிருந்து ஆனிமாதம் 3ம் வெள்ளிக்கிழமை புறப்பட்டு ஆனந்தபுரம் என்னும் மகிழி வந்தடைந்து அம்மனையும் வாழ்முனியையும் கோயில் சந்நதிகளில் மீண்டும் சேர்க்கும் ஐதீகம் முடிந்து மாலை பூந்தேர் பூங்கரகத்துடன் புறப்பட்டு தீமிதி விழா நடைபெறும்.

நாகப்பட்டினம் சென்றது முதல் திரும்பும் வரை கோயிலில் அர்ச்சனை வழிபாடு முதலிய எதுவும் நடக்காத வித்தியாசமான ஐதீகம் இத்திருக்கோயிலின் சிறப்பாகும். பிரதான தெய்வம் பச்சையம்மனாகவே இருந்தாலும் அவள் தவக்கோலத்தில் இருப்பதால் மகிழி வாழ்முனீஸ்வரர் காத்தாயி அம்மன் கோயில் எனவே இக்கோயில் வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கருங்கன்னி என்ற ஊரில் இருக்கும் பாலத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் சென்றால் உப்பாற்றங்கரை என்னும் ஆற்றின் கரையில் இயற்கை சூழலில் மகிழி அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here