மழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் புதுவை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பூமீஸ்வரர் கோயில். இக்கோயிலின் வடக்கு புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கற்களைகொண்டு கட்டப்பட்ட பெரியகுளம் ஒன்றும் உள்ளது. மன்னர்காலத்தில் இருந்தே இந்த கோயிலில் தேர்திருவிழா மிகச்சிறப்பாக நடந்து வந்தது. ஆனால் தேர் முற்றிலும் சிதிலம் அடைந்துவிட்டதால் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக தேர்திருவிழா நடைபெறவில்லை. இந்த கோயில் தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
பண்டைய காலத்தில் இப்பகுதி எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது.

எயிர் என்றால் அரண் என்று பொருள். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகப்பட்டினமாக திகழ்ந்துள்ளது. பின்னர் ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது. அந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கல்கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இங்கு அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயில் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலை கட்டியுள்ளனர்.

ராஜேந்திரசோழன் காலத்தில் ஒய்மா நாட்டு பட்டின நாட்டு பட்டணம் என அழைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க மன்னர் காலத்தில் மீண்டும் எயிர்பட்டினம் என அழைத்துள்ளனர். அதன் பிறகு விஜயராஜ மன்னன் கம்பண்ன உடையார் ஆட்சியின் போது மரக்காணம் என பெயர் மாற்றி அழைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பல்லவ மன்னர்கள் ஆட்சியின் போது இந்த கோயிலில் சில கட்டுமான பணிகளை செய்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். கோயிலின் வடக்குபுறத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பக்கம் விஷ்ணு சிலையும், வடக்குபக்கம் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது சிறப்பு அம்சங்கள் ஆகும்.

இதுபோல் இந்த கோயிலை தினமும் வந்து தரிசனம் செய்தால் நிலம் சம்மந்த மான பிரச்னைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்மந்தமான கோயில் என்பதால் இந்த கோயில் பூமீஈஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள சிவலிங்கம் தான்தோன்றி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு இங்கு அருள்பாலிக்கும் சிவனை வணங்கிவிட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்னை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும். மேலும் திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம், மனசஞ்சலம், தீராத நோய்கள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர் பூமீஸ்வரர் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

இது போல் கோயிலின் உட்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் அமைந்  துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், பைரவர், முருகப்பெருமான், சித்தி வினாயகர் சிலைகளும் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் எதிர் புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடி மரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர்பக்கம் சூரியன், சந்திரன் இணைந்த சிற்பமும் அழகாக அழைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க சிற்பங்கள் அனைத்தும் ராஜராஜ சோழன் காலத்து சிற்பங்கள் அனைத்தும் சிறிதுகூட சேதம் அடையாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. செல்வது எப்படி சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையின் ஓரத்திலேயே பூமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. எப்போதும் பேருந்து வசதி உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here