ஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம், போலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து

ஜாகிர் நாயக்கிற்கு வேண்டாம் சொல், இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமை’ (‘Say No to Zakir Naik, Equal Rights to Indians & Other Races’) குழு அமைப்பாளர்களிடமிருந்து, இப்பேரணி தொடர்பான அறிவிப்பு வந்ததை உறுதிபடுத்தியப் போலீசார், அந்த அறிவிப்பு முழுமையாக இல்லை என்றும் சட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறினர்.

“எனவே, நாட்டு மக்களின் சௌகரியத்தையும் நல்வாழ்வையும் உறுதிபடுத்த, பொது மக்கள் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அரிஃபாய் தாராவே நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேரணி சட்டம் 2012 செக்‌ஷன் 9(1) பிரிவின் படி, ஆகஸ்ட் 24-ம் தேதி, இரவு மணி 7-க்கு, லிட்டில் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸ்-இல் பேரணியை நடத்தும் நோக்கில், அந்த அறிவிப்பு இருப்பதாக அவர் கூறினார்.

அதனைப் போன்றே, அதேப் பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறவிருக்கும் இன்னொரு கூட்டத்திற்காகக் கொடுக்கப்பட்ட அறிக்கையும் முழுமையாக இல்லாததால், அப்பேரணியிலும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அரிபாய் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஒருதலைப்பட்ச மத மாற்றுப் பிரச்சினையில் முக்கிய நபராகக் கருதப்படும் இந்திரா காந்தி, திட்டமிடப்பட்டுள்ள அக்கூட்டத்தில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதை ‘இந்திரா காந்தி அதிரடி குழு’த் தலைவர் அருண் துரைசாமி உறுதிப்படுத்தினார்.

“ஆனால், இந்திரா காந்தி கலந்துகொள்ள மாட்டார், அவர் சார்பாக நான் பேசவுள்ளேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இந்தியாவால் தேடப்பட்டுவரும் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளது, சிறார்களை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றுவது, குடியுரிமை பிரச்சினைகள் மற்றும் பிரதமர் துறையின் கீழ், இந்தியர் உருமாற்ற பிரிவுக்கு (மித்ரா) ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் தொட்டு இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என்று அருண் கூறினார்.

பேரணி ஏற்பாட்டாளர், சங்கர் கணேஷ், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் கூட்டம் தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“பேரணி தொடரும். நாங்கள் நேற்று, புத்ராஜெயாவில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட்டைச் சந்தித்தோம், நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு, எங்கள் மகஜரை ஏற்க அவர் ஒப்புக்கொண்டார்,” என்று சங்கர் கூறினார்.

இருப்பினும், அந்தச் சந்திப்பு குறித்து தனக்குத் தெரியாது என்றும், அது உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் காலிட்டின் உதவியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here