கோலாலம்பூர்
அடுத்தாண்டு முதல் உணவகங்களில் சிகரெட் புகைப்பதற்குத் தடை விதிக்கப்படுவதை எதிர்த்து இயக்கம் ஒன்று நீதிமன்ற வழக்கைத் தொடுக்க முனைந்துள்ளது.
மலேசிய புகைப்போர் விழிப்புணர்வு இயக்கத்தின்(எம்எஸ்ஏஏ) செயலாளரான முகமட் லைசானி டோலா, புகைப்பிடிப்பது தங்களின் உரிமை என்றும் தடை செய்யும் முடிவை அறிவிக்கும் முன்னர், அமைச்சர் எங்களிடம் அது பற்றி கலந்து பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்படும் உணவகங்களில் சிகரெட்டுக்கான தடையை மீறுவோருக்கு 10,000 ரிங்கிட் அபராதமும் 3 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை எதிர்க்கும் எம்எஸ்ஏஏ, சிகரெட்டுக்கான தடையை நீக்க வேண்டுமென்பதே தங்களின் நோக்கம் என்றும் தங்களது இயக்கத்தை முறைப்படி பதிவு செய்த பின்னர், போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்தார்.
இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டால், குறைந்தது 2,000 உணவகங்களுக்கு மேல் மூடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தடையானது அடிப்படை உரிமையைத் தடுக்கும் என்றும் தாங்கள் அரசுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கை அக்டோபர் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி மரியானா யாஹ்யா விசாரிப்பார் என முகமட் லைசானி டோலா தெரிவித்தார்.