பேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி- பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி முகநூல் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.இந்த நிலையில், சமூக வலைத்தள நிறுவனங்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று பதில் மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்துக்கள், வாதங்கள், உண்மைகளை மறைத்துவிட்டு உச்சநீதிமன்றத்தை முகநூல் நிறுவனம் நாடியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பேஸ்புக் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற விஷயங்கள் தனி மனிதரின் அந்தரங்கத்தில் குறுக்கிடும் செயலாகும் என பேஸ்புக் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேபோல, வாட்ஸ்அப் என்பது உலகம் தழுவிய ஒரு செயலியாகும். இதன் செயல்பாடு குறித்து ஐகோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவு உலக அளவில் அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு எடுத்துக்கொண்டு விசாரிப்பதுதான் முறையாக இருக்கும் என வாதிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் கடந்த 18 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

எனவே, பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் ஐகோர்ட்டின் சட்டவரம்பை ஏற்றுக் கொண்டுள்ளன எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வரும் உயர்நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதேபோல, மத்திய அரசு, மற்றும் கூகுள், டுவிட்டர், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் இது தொடர்பான தங்கள் எதிர்வினையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் வைத்துள்ள கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என கூறி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here