பாடம் நடத்துவோமா?

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் சேவையாற்றுவதற்குக் கிடைத்திருக்கும் ஓர் உன்னத கௌரவம் ஆகும். பதவிக்காகவும் சொத்து சேமிப்பதற்கும் அப்புனிதமான பதவி எவ்வகையிலும் பயன்படுத்தப்படக்கூடாது.

சம்பளம் வாங்கும் ஒரு வேலை என்று கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பொறுப்புக்குக் கிஞ்சிற்றும் லாயக்கற்றவர்கள். மக்கள் அத்தனை பேரும் நாடாளு மன்றத்தில் போய் அமர முடியாது. அதற்காகத்தான் தங்களின் பிரதி நிதியாக – குரலாக தாங்கள் விரும்பும் ஒரு வேட்பாளரைத் தேர்தல் மூலம் தேர்வு செய்து அனுப்புகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அப்பட்டமான வார்த்தையில் மக்கள் பிரதிநிதிகள் என்றுதான் அர்த்தம். மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் முழு மனத்துடன் சேவையாற்றுவதுதான் இப்பதவியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

மாண்புமிகு ஆனதும் வந்த வழியை மறந்து விட்டு, நட்புகளையும் தூர நிற்க வைத்து விட்டு நான் யார் தெரியுமா? என் அந்தஸ்து என்ன தெரியுமா? தொட்டுப் பேசுகின்ற வேலையெல்லாம் இனி வேண்டாம் என்று பிதற்றித் திரிபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்குத்தான் இப்பதவி. கறந்த பால் எப்படி மீண்டும் மடி ஆகாதோ… அதே போல் பதவி போனதும் செல்லாக்காசுதான் என்ற எச்சரிக்கை அலாரம் எப்போதும் இந்த மாண்புமிகுகளின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மாண்புமிகு ஆனதும் மக்கள் தனது கார் கதவைத் திறந்து விட வேண்டும். மாலை மரியாதை செய்ய வேண்டும். தன்னைப் போற்ற வேண்டும். சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு ஒரே ஒரு சொல்தான்…

சொந்தக் காசில் சுனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்…மக்கள் முன்பு மாதிரி இல்லை. மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். பிடித்தால் வைத்துக் கொள்வார்கள். பிடிக்கவில்லை என்றால் தூக்கியெறிந்து விடுவார்கள்.

மக்கள் பக்குவப்பட்டிருக்கின்ற நிலையில் மாண்புமிகுகளும் பக்குவப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வயது தகுதி 35இல் இருந்து 60க்குள் இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது ஒரு வேலை அல்ல. அது மக்கள் சேவை என்பதாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பொதுத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதாலும் பென்ஷன் (ஓய்வூதியம்) வழங்கப்பட வேண்டுமா?

இந்தப் பொறுப்புக்கு பணி ஓய்வு என்பதற்கு காலவரை எதுவும் இல்லை. மக்கள் விரும்பினால் மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது ஒரு வேலை அல்ல!

நடப்புச் செயல்முறையில் நாடாளுமன்றத்திற்கு ஒரு தவணைக் காலம் என்பது 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளை முழுமையாக முடித்தவர் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தற்போது மத்திய சம்பள ஆணையத்தால் மறு ஆய்வு செய்யப்படுகிறது. இப்போதைக்கு அவர்களாகவே ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சம்பளத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். இந்த நடைமுறை தேவைதானா? இது தொடரத்தான் வேண்டுமா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நடப்பு சொகுசு மருத்துவச் சலுகைகளை முற்றாக அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக மக்களுக்கான அரசு மருத்துவமனைகளில் அவர்களும் சிகிச்சை பெற வேண்டும்.

இதன்வழி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் தரத்தை அவர்களால் முழுமையாக உணர முடியும். இதற்குப் பிறகாவது அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம் உயரலாம் இல்லையா! இது நடக்குமா?

இலவச ஆண்டுச் சுற்றுலா, மின்சாரம், நீர், மளிகைச் சாமான்கள், போன்பில் போன்ற எல்லா அனுகூலங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் இந்த அனு கூலங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்படு வதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. இப்படி எல்லாமே இலவசமாகக் கிடைப்பதால் சாமானியன்படும் அவஸ்தைகளை இவர்கள் உணர் வதே கிடையாது. தெரிந்து கொள்ளும் அக்கறையும் இல்லை.

உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கழுத்தை நெரிக்கும் விலைவாசிகளை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார்களே. இந்த விலைவாசி அதிகரிப்பால் ஒரு சாமானியனின் அடிப்படை வாழ்வாதாரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக இவர்களுக்கு உணர்த்த வேண்டாமா?

கறைபடிந்த பதிவுகள், கிரிமினல் ரிக்கார்டுகள், தண்டனை பெற்றவர்கள், நாடாளுமன்றத்திற்குப்
போட்டியிடுவதிலிருந்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். இது தவிர வேறு எந்தப்பதவிகளிலும் இவர்கள் அமர்த்தப் படக்கூடாது.

அரசியல்வாதிகள் அவர்கள் பதவி வகிக்கும் காலத்தில் அவர்களால் ஏற்படும் நிதி இழப்புகளை அவர்கள்தாம் ஈடுசெய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தாரை அதற்குப் பொறுப் பேற்கவைக்க வேண்டும். மக்களின்
வரிப்பணம் அதற்கு எவ்வகையிலும் பயன் படுத்தப்படக்கூடாது. சரிதானே?

பொது மக்களுக்கான எல்லாச் சட்டங்களும் விதிமுறைகளும் தங்களுக்கும் உரியதே என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து தெளிவுபெற வேண்டும்.

பிரதமர், துணைப் பிரதமர், நீதி, தற்காப்பு அமைச்சர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு அவுட்ரைடர்ஸ் போலீஸ் பாதுகாப்பு அகற்றப் பட வேண்டும். அப்போதுதான் சாலைகளில் பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கும் இன்னல்கள் அவர்களுக்குப் புரியும்.

இப்படியாவது நாட்டின் சாலைகளில் போக்கு வரத்து முறை சீர்படுத்தப்படட்டுமே! சாலை மேம்பாட்டுப் பணிகள், எம்ஆர்டி திட்டங்களால் மக்களும் நாளும் அனுபவிக்கும் துன்பங்களை இவர்களும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்கட் டுமே!

நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட எந்தக் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டாரோ, அந்தக் கட்சியில்தான் கடைசி வரை நீடித்து நிலைத்திருக்க வேண்டும்.

இடையில் எதற்கோ ஆசைப்பட்டு விலகினால், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை அவர் இழக்க வேண்டும். அது மட்டும் அல்லாது, இனி எந்த ஜென்மத்திலும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் அவர் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். இது நடக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here