பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது, அறிவுடைமை அல்ல

அண்மையில், உயர்மட்ட அரசு ஊழியர்களான, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் போர்ஹான் டோலா மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் பக்கார் இருவரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த, அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சைகிடையே, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி, துன் டாக்டர் மகாதிர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு ஒரு சுமை என்று கூறினார். இந்த ஆண்டிற்கான மொத்த ஓய்வூதியச் செலவு தற்போது RM28 பில்லியன் (இது நாட்டின் பட்ஜெட்டில் 10 விழுக்காட்டுக்குச் சமம்) என்ற மகாதிர், இருப்பினும், ஓய்வூதியம் குறித்து எந்தவொரு முடிவும் இன்னும் எடுக்கவில்லை என்றார்.

நிரந்தர வேலை வாய்ப்பிலிருந்து, தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையிலான வேலை வாய்ப்புக்கு மாறுவது என்பது உலகளாவிய அளவில் பல எதிர்மறை விளைவுகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள், வேலை பாதுகாப்பின்மையை உருவாக்குவதோடு; வேலையின்மை மற்றும் வறுமைக்கு வழிவகுத்து, மக்களை எதிர்காலத்தைப் பற்றியக் கவலையோடு வாழ வைக்கிறது.

பொதுச் சேவைத் துறையை எடுத்துகொண்டால், அர்ப்பணிப்புத் தன்மை குறைந்துபோய், ‘நாட்டுக்குச் சேவை செய்கிறோம்’ எனப் பெருமைகொள்ள முடியாமல் செய்கிறது. மேலும், தங்கள் வேலையைத் தக்க வைத்துகொள்ள, மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க அல்லது அவர்களைக் கைக்குள் போட்டுக்கொள்ள இவர்கள் பல செயல்களில் ஈடுபட முனைவர். இதுபோன்ற நடவடிக்கைகள், பொதுச்சேவைத் துறையில், ஆரோக்கியமானதொரு சூழலை நிச்சயம் ஏற்படுத்தாது.

அதுமட்டுமின்றி, அவர்கள் அரசாங்கச் சேவையில் இருக்கும்போதே, மாற்றுத் தொழில்களுக்குத் தங்களைத் தயார்படுத்தத் தொடங்கிவிடுவர். எனவே, ஓய்வூதிய திட்டத்தை ஒழிப்பது என்பது புதிய தாராளமய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இதனால், அரசாங்க இயந்திரங்கள் சுருங்கிப்போய், திறனற்றதாக ஆகிவிடும்.

சமூகப் பாதுகாப்பைப் பாதிக்கும் மற்றும் மக்களின் வாழ்க்கையை நிச்சயமற்றதாக மாற்றும் எந்தவொரு கொள்கையையும் பிஎஸ்எம் எதிர்க்கிறது. அதனால், அரசாங்க ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

அதோடுமட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கான ‘யுனிவர்சல் ஓய்வூதிய திட்ட’த்தை அறிமுகப்படுத்தினால், மலேசியா முன்னேற்றப் பாதையை நோக்கி நகர முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள், தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது – அடிப்படையில் எங்களுக்கு ஏன் ஓர் அரசாங்கம் தேவை?

சட்டம், ஒழுங்குமுறைகளை நிலைநிறுத்துவது அதன் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று என்பது உண்மைதான். அதேசமயம், நமது பொருளாதாரம் ஒழுங்காக செயல்படுவதை உறுதி செய்வதும், அதன்வழி மக்களுக்கு எப்போதும் வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுவதும், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்குவதும் கூட ஓர் அரசாங்கத்தின் கடமைதான்.

ஆனால், இப்போது, மலேசியாவை “வணிக நட்புறவு நாடாக” மாற்றுவதும், சர்வதேசக் கடன் மதிப்பீட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதுவும் பி.எச். அரசாங்கத்தின் முக்கியக் கடப்பாடாக மாறிவிட்டது.

நம் மக்கள் பொருளாதாரத்தில் பின் தள்ளப்பட்டு, அவர்களிடையே நீண்ட இடைவெளி ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் ஓர் அரசாங்கத்தின் கடமைதான் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

சந்தை தாராளமயக் கொள்கை, அனைத்து துறைகளின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யாது, குறிப்பாக, பி40 குழுவினருக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க அது தவறிவிட்டது என்பதனை பி.எச். நிச்சயம் உணர்ந்திருக்கும். மேலும், குறைந்த சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் பெரு நிறுவனங்களின் வருகையையும் பிஎச் தலைவர்கள் உணர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்.

இந்தச் சூழலில், பொறுப்புள்ள ஓர் அரசாங்கம் அதில் தலையிட்டு, பி40 குழுவினரின் நலனைப் பாதுகாக்க இரண்டு விஷயங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஒன்று, நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தல். இரண்டாவது, அனைத்து மலேசியர்களுக்கும் வலுவான பாதுகாப்பு வலையை உருவாக்குதல். ஆனால், இந்த இரண்டிலுமே, பிஎச் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

சமீபத்தில், தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில், மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி) ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 65-ஆக உயர்த்த பரிந்துரைத்தது. (ஸ்டார் ஆன்லைன் 1/9/2019) இதனை, தொழிலாளர்களின் உதவிக்கான கூக்குரலாக நாம் பார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின் படி, சேமநிதி (ஈபிஎஃப்) செலுத்தும் 68 விழுக்காடு பணியாளர்கள், தங்களின் 54-வது வயதில், சேமநிதி கணக்கில் RM50,000-க்கும் குறைவான சேமிப்புத் தொகையையே வைத்திருக்கிறார்கள். மேலும், இவர்களில் பெரும்பாலானோர் பணி ஓய்வு பெற்றவர்கள் என்பதனால், குறுகியக் காலத்திலேயே, தங்களின் சேமிப்புத் தொகையை அவர்கள் முடித்துவிடுகிறார்கள் (ஸ்டார் ஆன்லைன் 25/10/17)

பெரும்பாலான மலேசியர்களுக்கு, முதுமை காலத்தில் எந்தவிதமான சேமிப்பும் இருப்பதில்லை, 70 வயதை எட்டும் போது, தங்கள் குடும்ப உறுப்பினர்களையே அவர்கள் நம்பியிருக்க நேரிடுகிறது. அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவதாலேயே, ஓய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும் என எம்.டி.யூ.சி முன்மொழிந்துள்ளது.

இந்தக் காரணத்தினால்தான், அரசாங்க ஓய்வூதியம் அல்லது சொக்சோ உதவிதொகை இல்லாத 70 வயதுக்கு மேற்பட்ட மலேசியக் குடிமக்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிஎஸ்எம் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை, மாதத்திற்கு RM300-ல் தொடங்கலாம் என்பது எங்களின் பரிந்துரை. தற்போது, பிற ஓய்வூதியங்கள் பெறாமல், இந்தப் பிரிவில் சுமார் 800,000 பேர் இருக்கிறார்கள், இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, ஆண்டுக்கு RM2.9 பில்லியன் தேவைப்படும்.

இந்தத் தொகை, ஏறக்குறைய வாழ்க்கைச் செலவின உதவிநிதி (பிஎஸ்எச்) ஒதுக்கீட்டிற்குச் சமம், தேசியப் பட்ஜெட்டில் 1 விழுக்காட்டுக்கும் குறைவு. வயதான நபர் ஒருவர் வாழ்வதற்கு RM300 ஏற்ற தொகை அல்ல என்றாலும், இது நிச்சயமாக அவர்களைப் பராமரிக்கும் குடும்பங்களின் சுமையைச் சற்று குறைப்பதோடு; அம்முதியோரின் வாழ்க்கைக்கு ஓரளவு கண்ணியத்தையும் அது கொடுக்கும்.

இத்திட்டத்தில் உடன்படாதவர்கள், மத்திய அரசின் பட்ஜெட் மட்டுப்படுத்தப்பட்டது, 70 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் செலவினங்கள் அதிகரிக்கும் என்று கூறி; இதனைத் தொடங்குவது விவேகமற்றது என்றும் வாதிடுவார்கள்.

நாட்டின் செல்வம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று என்று பிஎஸ்எம் வாதிடும். அந்நிய முதலீட்டோடு போட்டிபோட வேண்டும், நமது நாட்டின் ஏற்றுமதிகள் சர்வதேச சந்தையில் போட்டிபோட வேண்டும் என்பதற்காக, நாம் ஏற்கனவே குறைந்த ஊதியக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், நாட்டின் நன்மைக்காக, குறைந்த ஊதியத்தைப் பெற்றுகொண்டு வேலை செய்யுங்கள் என, நம் தொழிலாளர்களை நாம் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். வயதான காலத்தில், நம் ஊழியர்களிடம் போதுமான சேமிப்பு இல்லாததற்கு இதுவே முக்கியக் காரணம்.

எனவே, கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சமூகப் பாதுகாப்பு வலைகளை வலுப்படுத்துவதற்கும், அவர்கள் 70 வயதை எட்டும்போது ஒரு சிறிய உதவியை வழங்குவதற்கும், தொழிலாளர்களின் முயற்சி மற்றும் தியாகங்களால் சேமிக்கப்பட்ட சில செல்வங்களைப் பயன்படுத்துவது நியாயம்தானே?

இதை ஏற்காதவர்கள், 1983-ம் ஆண்டில், 43.8 விழுக்காடாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2019-ல் 21.6 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்பதை உணர்ந்து இருக்கிறீர்களா? ஆசியான் நாடுகளிடையே வரி விகிதங்களைக் குறைப்பது உட்பட, பல காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டது – நமது நாட்டின் பெருநிறுவன வரி விகிதம் கார்ப்பரேட் இலாபங்களில் இருந்து 40 விழுக்காடு ஆகும், ஆனால் இப்போது அது 24 விழுக்காடு மட்டுமே, இதை இன்னும் குறைக்க விரும்புகிறார்கள்.

இன்னுமொரு காரணம் என்னவென்றால், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளின் கீழான நிதி தாராளமயமாக்கல் ஆகும். அந்த உடன்பாடு, மலேசியாவில் வரி செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு, பெரிய நிறுவனங்கள் பெரும் இலாபத்தை வெளியேற்ற அனுமதிக்கின்றது.

வர்த்தகம் மற்றும் நிதி விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதில் பணக்காரப் பெருநிறுவனங்கள் வைத்திருக்கும் அசாதாரண சக்தியின் விளைவு இது. இது மனிதனால் உருவாக்கப்பட்டதாகும்.! அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது குறித்து, பிஎச் அரசாங்கம் தற்போது பேசுவதற்கு முக்கியக் காரணம், அரசாங்கத்தின் வருவாய் குறைந்து வருவதே.

பெருநிறுவனங்களின் வரியைக் குறைப்பது, ஆசியான் நாடுகளிடையே வரி ஏய்ப்பு போன்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்று பி.எஸ்.எம். கருதுகிறது. அப்போதுதான் ஓய்வூதியங்களுக்கான சமூக செலவினங்களை விரிவுபடுத்துவதற்கும், சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்கள் நலத்துறைக்கான வரவு செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்கும், பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், பசுமை வளங்களுக்கு நிதியளிப்பதற்கும் அரசாங்கத்திடம் நிதி இருக்கும்.

நிச்சயமாக இதற்கு பல தேசிய அமைப்புகளின் முயற்சி தேவைப்படும், ஒரே இரவில் அதனை அடைய முடியாது. இருப்பினும், பிஎச் அரசாங்கம் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதா? இதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறதா?

தற்போது, சமூக நலன் தொடர்பான செலவினங்களை அதிகரிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும், பிஎச்-ன் பதில், “மன்னிக்கவும், பணம் இல்லை. நம்மிடம் தேவைக்கும் குறைவான பணமே உள்ளது!” என்பதாகும். இதுபோன்ற பதில்களை நாம் தொடர்ந்து ஏற்றுகொள்ள முடியாது.

உலகப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் மலேசிய செல்வத்தின் பெரும்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். மலேசியர்களைச் சரிநிகரான சமூகமாக மாற்ற, இந்த நிதியைப் பயன்படுத்துங்கள். இது அரசாங்கத்தின் பொறுப்பு, தயவுசெய்து அதை செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here