இந்தியர்களின் வீடுகளைக் குறிவைத்த முகமூடி கொள்ளையர்கள் பலி

கோலாலம்பூர் – கதவுகள் திறந்த நிலையில் இருந்த இந்தியர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் முகமூடிக் கும்பலைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடின் நேற்று நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் கூறினார். இந்தக் கும்பலிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், மூன்று பாராங்கத்திகள், முகமூடிகள், கையுறைகள், ஒரு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


நேற்று அதிகாலையில் ரவாங், பண்டார் கன்ட்ரி ஹோம்சில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சிவப்பு வோல்ஸ்வேகன் காரை போலீஸ் குழுகண்டது. அந்தக் காருக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று ஆடவர்கள் இருந்ததையும் போலீசார் பார்த்துள்ளனர். அவர்களைச் சாதனையிட போலீசார் நெருங்கிச் சென்றபோது அவர்கள் காரை அங்கிருந்து வேகமாகச் செலுத்தத் தொடங்கினர். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம் போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர்.

முன்னதாக பெக்கான் பத்து ஆராங்கை நோக்கி வேகமாகச் சென்ற அந்தக் காரை நிறுத்தும்படி போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் போலீஸ் ரோந்துக்காரை அந்த நபர்கள் தங்களுடைய காரால் இடித்துத் தள்ள முயன்றுள்ளனர். இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கும்பலின் கார் தடம் புரண்டு சாலையின் இடதுபுறத்தில் சிக்கிக் கொண்டது. கொள்ளையர்களால் அந்தக் காரை அங்கிருந்து செலுத்த முடியவில்லை.

காருக்குள் இருந்த கொள்ளையர்கள் போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். போலீசார் பதிலுக்கு சுட்டதில் அந்த மூவரும் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்துப் பலியாயினர். வீடுகளில் புகுந்து கொள்ளையிடுவதற்கு இந்தக் கும்பல் பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள், மூன்று பாராங்கத்திகள், முகமூடிகள் உள்ளிட்டவை காருக்குள் இருந்ததையும் போலீஸ் கண்டுபிடித்தது.கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் போலி எண் பட்டை பொருத்தப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இந்தக் கார் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரவாங், கிரீன்பார்க்கில் உள்ள இந்தியரின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டதாகும்.

அந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையிட்ட பின் அவர்களுடைய சிவப்பு நிற வோல்ஸ்வேகன் காரையும் கடத்திச் சென்றனர்.சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று கொள்ளையர்களின் அடையாளம் உறுதியாகத் தெரியவில்லை. அவர்களிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கி 60க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் இந்தக் கும்பல் எத்தனை கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை. வீடுகளில் புகுந்து நிகழ்த்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் பெரும்பாலும் அதிகாலை 3.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடையே நிகழ்ந்திருப்பது தெரிய வருகிறது. கொள்ளைக் கும்பல்களை ஒழிப்பதில் போலீஸ் முனைப்புக் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். கிள்ளான் பள்ளத்தாக்கில் இந்தியர்களின் வீடுகள் சிலவற்றில் முகமூடிக் கும்பல் கைவரிங்காலை காட்டியிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

– இரா. கோபி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here