கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மகாராஷ்ட்டிரா – மும்பையில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலும் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழைக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பல கோடி மதிப்பு சொத்துக்கள்  சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் மீண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அதன் அபடிப்படையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

மும்பை புறநகர் பகுதி, நவி மும்பை, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. மும்பையின் தெற்கு பகுதிகளில் இரவு 10.30 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. மும்பை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ரயில், பஸ், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. மேலும் ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும் எனவும் கூறியுள்ளது. இதனிடையே மும்பை, தானே மற்றும் கோன்கான் பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மஹாராஷ்டிர மாநில பள்ளி, கல்வித்துறை அமைச்சர் ஆஷிஸ் செலார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்திடுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here