கோலாலம்பூர்,
சமூகப் பொருளாதாரம், திறன் மேம்பாடு, சுகாதாரம், கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டு ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக மித்ரா மூலம் ஒதுக்கப்பட்ட மானியத்தில் இன்னமும் 30 மில்லியன் செலவிடப்படாமல் இருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய உருமாற்ற பிரிவு (மித்ரா) மூலம் 2019 பட்ஜெட்டின் கீழ் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரிம. 100 மில்லியன் மானியத்தை இந்திய சமுதாயம் முழுமையாகப் பயன்படுத்துமாறு நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவுறுத்தியுள்ளார்.
” மீதமுள்ள 30 மானியத்திற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு இன்னும் ஒரு மாதம் ஒன்பது நாட்கள் உள்ளன.
பிரதமர் துறையின் மூலம் (பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியின் கீழ்) தயவுசெய்து இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கவும், ”என்று அவர் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களில் சம்மேளனம் (மைக்கி) நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் உரையாற்றியபோது வலியுறுத்தினார்.
அதே நோக்கத்திற்காகப் பிரதமரின் துறையின் கீழ் மித்ராவுக்கு 2020 பட்ஜெட்டில் அரசாங்கம் RM100 மில்லியனை ஒதுக்கியது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
இன்னும் ஒரு மாத காலகட்டத்திற்குள் மித்ரா மானியம் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த மானியம் திருப்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும். இது இந்தியர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமையுமென்பது குறிப்பிடத்தக்கது.