சென்னை, டிச. 2-
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல என்றும், தி.மு.க. குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களி டம் பேசிய அவர், ஓர் உண்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மை என ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி வருகிறார் முதல்வர் பழனிச்சாமி என விமர்சித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு வருகிறது. அதற்காக பலரை மறைமுகமாக நீதிமன்றத்துக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.
3 வருடமாக இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. சார்பில், தேர்தலை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு போன்றவற்றையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும் என சொல்லி இருக்கிறோம்.
அந்த அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், இதெல்லாம் முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர தி.மு.க. தேர்தலை நிறுத்தியதாக சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து தி.மு.க. தான் நீதிமன்றத்துக்கு சென்று தடை போட்டு தேர்தலை நிறுத்திவிட்டதாக தவறான தகவலை பரப்புகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத்தன்மையோடு இல்லை. பலமுறை கோரிக்கை வைத்து எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலைநாட்டவேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.
12,500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தை கூட்டியவர்கள் நாங்கள். இந்த அரசு கூட்டவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.தான் கூட்டி, அங்குள்ள பிரச்சினைகளைக் கேட்டு மனுக்களை பெற்றோம். ஆகவே தேர்தல் நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தேர்தலை நிறுத்துவது நோக்கமல்ல. ஒருவேளை சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதை சந்திப்பதற்கு தி.மு.க. தயாராக உள்ளது என மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.