மலேசிய சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 15ஆவது தேசிய சிலம்பப் போட்டியில் பேரா குழு 15 தங்கத்தை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
ஸ்ரீசெர்டாங்கில் உள்ள விளையாட்டு அரங்கில் கடந்த இரு தினங்களாக தேசிய சிலம்ப விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. தகவல் பல்லுடக அமைச்சர் கோபிந்த் சிங், தேசிய விளையாட்டு மன்றம், மலேசிய ஒலிம்பிக் மன்றம் ஆதரவில் நடந்த இப்போட்டியில் சபா உட்பட 11 மாநிலங்கள் பங் கேற்றன. அழைப்பிதழ் குழுவாக எம்.ஜி.ஆர். சிலம்பக்கழகம் கலந்து கொண்டது.
தனித்திறமை, கம்பு சட்டை, நேரடி சண்டை என்று மொத்தம் 35 பிரிவுகளில் தங்கத்தை தட்டிச் செல்ல 300க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டாளர்கள் களத்தில் இறங்கினர்.
இதில் பேரா குழு மொத்தம் 15 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலத்தை வென்று சா ம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பினாங்கு குழு 7 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலத்தை வென்று 2ஆவது இடத்தையும் சிலாங்கூர் 5 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலத்தை வென்று 3ஆவது இடத்தையும் பிடித்தன.
விலாயா மாநிலம் 2 தங்கம், 2 வெள்ளி, 15 வெண்கலத்துடன் 4ஆவது இடத்தையும் ஜோகூர் 1 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
பகாங் 2 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 6ஆவது இடத்தையும் கெடா 1 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 7ஆவது இடத்தையும் புத்ராஜெயா 1தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. எம்.ஜி.ஆர். சிலம்பக் கழகம் 3 வெள்ளி, 1 வெண்கலத்துடன் 9ஆவது இடத்தையும் சபா 1 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 10ஆவது இடத்தையும் பெர்லிஸ் 1 வெண்கலத்துடன் 11ஆவது இடத்தையும் பிடித்த வேளையில் மலாக்கா எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை.
மலேசிய சிலம்பக் கழகத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு வருகை புரிந்த மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ஷாமளா, சிலாங்கூர் கெஅடிலான் உதவித் தலைவர் டாக்டர் சதீஸ்குமார் ஆகியோர் வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினர்.
இதனிடையே, அடுத்தாண்டு ஜோகூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2013 சுக்மா போட்டியில் சிலம்பம் இடம்பெற்றது கடைசி முறையாகும். 7 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னர் ஜோகூர் சுக்மாவில் சிலம்பத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மலேசிய சிலம்பக் கழகத் தலைவர் ஏ.விஸ்வலிங்கம் தெரிவித்தார்.
ஜோகூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன், ஆட்சிக்குழு உறுப்பினர் ஷேக் ஒமார் ஆகியோர் மேற்கொண்ட தீவிர முயற்சியால் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக் கலைக்கு மீண்டும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று விஸ்வலிங்கம் பெருமையோடு குறிப்பிட்டார்.