பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – பேரங்காடி மையம் இடிந்தது!

மணிலா –

பிலிப்பைன்சை ஞாயிற்றுக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த பேரகங்காடி மையமொன்றின் இடிபாடுகளிடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் தீவான மிண்டானோவில் உள்ள படாடா நகரில் உள்ள சதர்ன் டிரேட் ஷாப்பிங் செண்டர் எனும் அந்த பேரங்காடி மையம் நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் ஐவர் சிக்கிக் கொண்டனர் என்று துயர்துடைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ரிக்டர் கருவியில் 6.8 எனப் பதிவான அந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் படாடா நகர் உள்ளது.

சங்கிலி ரம்பங்களால் இடிபாடுகளை அறுத்து அங்கு சிக்கிக் கொண்டவர்களைத் தேடும் பணியை மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நவீனக் கருவிகளும் அப்பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவர்கள் எவரும் உயிருடன் இருக்கும் சாத்தியம் இல்லை என்று வட்டார துயர்துடைப்புத்துறை அதிகாரி கிறிஸ்டோபர் டான் தெரிவித்தார். அப்பகுதியை இரவு முழுவதும் பின்னதிர்வுகள் உலுக்கிக் கொண்டிருந்ததால், மீட்புப்பணியை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டது.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமியொருத்தி மரணமடைந்தாள். மேலும் இரண்டு பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தென் மிண்டானோவை அக்டோபர் மாதத்திலிருந்து ஐந்து நிலநடுக்கங்கள் உலுக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தில் மேலும் முப்பத்தோறு பேர் காயமுற்றனர் என்று வட்டாரத் தகவல்துறை அதிகாரி பிரான்சிஸ் இராக் குறிப்பிட்டார். பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. எட்டு அரசாங்க கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. சாலைகளின் நடுவே கட்டடச் சிதறல்கள் குவிந்து கிடப்பதால் வாகனப் போக்குவரத்து நிலை குத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here