நியூயார்க் 23 –
தூங்குவதற்கு முன்பு மின்னியல் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். குறிப்பாக படுக்கைகளில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
படுக்கையில் படுத்துக்கொண்டே கைப்பேசிகளைப் பயன்படுத்துவது தூக்கத்தைப் பாதிக்கும் என்பது தெரியும். ஆனால், உடலுக்குள்ளும் அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. படுக்கையில் படுத்துக்கொண்டே கைப்பேசிகளைப் பயன்படுத்தும் பழக்கம் ஒரு விபரீதமான சங்கிலி எதிர்வினையை உருவாக்குகிறது என்று டாக்டர் டேனியல் சிகெல் குறிப்பிட்டுள்ளார்.
கைப்பேசிகளில் இருந்து வெளியாகும் ஃபோட்டன்கள் ஸ்ட்ரீம் எனப்படும் ஒலி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது நமது மூளைக்குள் நடக்கும் மெலடோனின் சுரப்பைத் தடுத்து விடும். இந்தச் சுரப்பு என்பது நமது உடலைச் சோர்வாக இருக்கும்படியாக உணரச் செய்யக்கூடியது. மெலடோனின் பாதிப்பு மனிதர்களின் உறக்க – விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தி விடும்.
இந்நிலை ஏற்படும்போது நாம் சோர்வாகவோ அசதியாகவோ இருப்பதை உணர மாட்டோம். தொடர்ந்து கைப்பேசிகளைப் பயன்படுத்திக் கொண்டே இருப்போம்.
ஒரு மனிதனுக்கு 7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். அது உடல்- மன ரீதியாக மனிதர்களுக்கு நன்மையைத் தரும். அது கட்டாயமும்கூட.
நச்சு ரசாயனம் மற்றும் மூளையின் நச்சு ரசாயனங்களைச் சுத்தம் செய்ய உடலுக்கு 7 மணி முதல் 8 மணி நேர உறக்கம் என்பது ஒரு கட்டாயமாகும். அப்போதுதான் அடுத்தடுத்த நாளுக்கான வேலையை மூளை திறம்படச் செய்யும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஆகவே, நாம் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மின்னியல் கருவிகள் சார்ந்த வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கைக்குச் செல்வது உறக்கத்திற்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கும் இதுவே சிறந்தது என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.