பேராக்கில் 134 தமிழ்ப்பள்ளிகளில் 1,848 மாணவர்கள் பதிவு: 6 பள்ளிகளில் பூஜ்ஜியம்!

ஈப்போ –

பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் இவ்வாண்டில் 1,848 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகியுள்ளனர். 2019இல் 1,855 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகினர்.

பேராக் மாநிலத்தில் 6 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் எந்தவொரு மாணவரும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி, பொண்டோக் தஞ்சோங், சுங்கை தீமா, டத்தோ சிதம்பரம் பிள்ளை, களும்பாங் மற்றும் ஹோலிரோட் ஆகியவையே அப்பள்ளிகளாகும். இருப்பினும், ஹோலிரோட் தமிழ்ப் பள்ளி தைப்பிங் தாமான் காயாவிற்கு இடம் மாற்றம் பெறுவதால் இந்தப் பள்ளி பாதிப்பை எதிர்நோக்காது எனலாம்.

இந்தச் சரிவிற்குக் காரணம் இந்தியர்கள் தோட்டப்புறங்களில் வேலை செய்வது கிடையாது. அதனால், தோட்டப்புறப் பள்ளிகளில் இந்திய மாணவர்கள் பதிவு குறைந்து கொண்டு வருகிறது.

பேராக்கில் 84 தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அதிகமான சிறுபள்ளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
இரு மொழி பாடத்திட்டம் அமலாக்கம் செய்யப்படும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அதிகமாகப் பதிவு செய்கின்றனர். அந்த வட்டாரத்தில் இதுபோன்ற தமிழ்ப்பள்ளிகள் இல்லாதபோது பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தேசியமொழிப் பள்ளியில் பதிவு செய்கின்றனர்.

இங்குள்ள புந்தோங் தொகுதியில் மூன்று தேசியமொழிப் பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இத்தொகுதியில் ஐந்து தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் இரு பள்ளிகள் இரு மொழி பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளன. இந்த மூன்று பள்ளிகளிலும் இந்திய மாணவர்கள் 95 சதவீதம் உள்ளனர்.

இந்த முதலாம் ஆண்டு பதிவு எண்ணிக்கை இன்னும் இருவாரங்களில் மேலும் அதிகரிக்கலாம். குறிப்பாக, இரு வாரங்களில் தேசியமொழிப் பள்ளிகளிலிருந்து தமிழ்மொழிப் பள்ளிக்கு மாற்றலாகி வரும் மாணவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படலாம். அவ்வாறு இதுவரை நான்கு மாணவர்கள் உள்ளனர் என்று பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கண்காணிப்பாளர் சுப. சற்குணன் தெரிவித்தார்.

அத்துடன், ஆவணச் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களும் இன்னமும் இருந்து வருகின்றனர். அதனால் சில வாரங்களுக்குள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படலாம். இதனால் பேராவில் முதலாம் ஆண்டு மாணவர்கள் பதிவு எண்ணிக்கை கடந்தாண்டைவிட ( 1855) தாண்டலாம் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here