செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.
லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும்.
துதி பாடல் பாடுங்கள்
ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை மகா லட்சுமியை ஆலயங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம். தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் திருக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம்.
தினமும் கோலம் போடுங்கள்.
மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவும் தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும்.
அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும். மகா லட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்.
சந்தனம், பன்னீர் தெளியுங்கள்
மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரையும் பன்னீர் தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகை ததும்ப வரவேற்க வேண்டும். சந்தனம் திருமகளோடு அவதரித்த ஐந்து மரங்களில் ஒன்றாகும். அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது. இதனால் லட்சுமி தேவி அந்த சுப கைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம்.
பெண்களை திட்டாதீர்கள்
முக மலர்ச்சியுடன் இருக்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்பார்கள். அதனால்தான் இல்லத்துக்கு அரசியாக இருக்கும் பெண்களை கிரகலட்சுமி என்று சொல்வார்கள். பெண்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அந்த வீடே, லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். ஆகவே இல்லப் பெண்மணிகளை தீயச் சொல் கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது.
பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.