சீனா – இந்தியாவில் இருந்து 50 லட்சம் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருவார்கள்

கோலாலம்பூர் –

அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள 2020 மலேசியாவுக்கு வருகைபுரியும் ஆண்டை முன்னிட்டு சீனா, இந்தியாவைச் சேர்ந்த 50 லட்சம் சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என்று சுற்றுலா கலை, கலாச்சாரத்துறை அமைச்சு நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இந்த இரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு ஓராண்டு காலத்திற்கு விசா விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி முதல் தேதி தொடங்கி இவர்கள் சுற்றுலா விசா இன்றி 15 நாட்கள் மலேசியாவில் தங்கலாம். இந்த விசா சலுகை மூலம் இவ்விரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுப்பயணிகளின் எண் ணிக்கை மலேசியாவுக்கு வருகை தருவது அதிகரிக்கும் என அமைச்சர் முகமட்டின் கெத்தாபி நம்பிக்கை தெரிவித்தார்.

அந்த இருநாடுகளையும் சேர்ந்த 50 லட்சம் சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து 40 லட்சம் சுற்றுப்பயணிகளும் இந்தியாவில் இருந்து 10 லட்சம் சுற்றுப் பயணிகளும் மலேசியாவுக்குச் சுற்றுலா மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்தால் நமக்கும் இன்னும் அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.

மலேசிய சுற்றுலா மையத்தில் 2020 மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டுக்கான அதிகாரப் பூர்வ முத்திரையை வாகனங்களில் ஒட்டும் நிகழ்வைத் தொடக்கிவைத்து அவர் பேசினார்.

விசா விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் கூடுதல் நாட்கள் மலேசியாவில் தங்கும் பிரச்சினை ஏற்படுமா எனக் கேட்டபோது, அதற்குச் சாத்தியம் இல்லை என்று அமைச்சர் பதிலளித்தார்.
நம்முடைய நாட்டில் சட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here