மன்னிப்புக் கேட்டார் போப்பாண்டவர்!

வாட்டிகன் நகர் –

கத்தோலிக்கர்களின் வாட்டிகன் தலைமையகத்தில் போப்பாண்டவர் பிரான்சின் கரத்தை ஒரு பெண்மணி முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்தார். சினமடைந்த போப்பாண்டவர் அப்பெண்ணின் கைமீது இரண்டு முறை அடித்து தமது கரத்தை விடுவித்துக் கொண்டார். அப்பெண்ணிடம் ஆவேசமாக நடந்து கொண்டதற்காக அவர் நேற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அப்பெண்ணின் செய்கை தம்மை பொறுமை இழக்க வைத்தது என்றும் தமது செயல் தவறான முன்னுதாரணமாக உள்ளது என்றும் பிரான்சிஸ் தெரிவித்தார். புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் வாட்டிகனின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அச்சம்பவம் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு பிரசங்கம் செய்வதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி பிரான்சிஸ் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென்று போப்பாண்டவரின் கையை இறுகப் பிடித்துத் தன்பக்கமாக இழுத்துக் கொண்டாள்.

இதனால், அதிருப்பியுற்ற பிரான்சிஸ் (வயது 83) அப்பெண்ணின் கைமீது இரண்டு முறை பலமாக அடித்து தமது கரத்தை விடுவித்துக் கொண்டார். மறுநாளான புதன்கிழமையன்று செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ விசுவாசிகளிடையே சமய உரை நிகழ்த்திய பிரான்சிஸ், நாம் பல தடவை பொறுமை இழப்பதுண்டு. அதில் நானும் அடக்கம். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவம் தவறான முன்னுதாரணமாகும். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை கடவுளை அவமதிக்கும் ஒரு செயலாகும் என்றும் தமது உரையில் அவர் வலியுறுத்தினார். பெண்களின் உடல் விளம்பரத்திற்காகவும் லாபத்திற்காகவும் ஆபாசப் படத்திற்காகவும் பயன்படுத்தப்படுவது ஒரு இழிவான செயலாகும். பெண்ணின் உடல் பயன்பாட்டுப் பொருளாக மாற்றப்படக்கூடாது. பெண்கள் மதிக்கப்படவும் போற்றப்படவும் வேண்டியவர்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.

பெண் என்பவள் ஓர் உயிரை உருவாக்கும் உன்னத பணியை செய்பவள். இருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து அடிக்கப்படுகின்றனர், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர், கட்டாயப்படுத்தி விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன் பிறகு கருக்கலைப்பும் செய்யப்படுகின்றனர். பெண்களின் உடலை எவ்வாறு மதிக்கிறோம் என்பதை வைத்துதான் நமது மனிதநேயம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று போப்பாண்டவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here