கோலாலம்பூர் –
அமைச்சரவையின் உத்தரவுகளை மீறிய காரணத்திற்காகத்தான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து டாக்டர் மஸ்லீ மாலிக் நீக்கம் செய்யப்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
பதவியில் இருந்து விலகும்படி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கடிதம் எழுதியதால் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லீ மாலிக் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் முடிவுகளை அடிக்கடி எடுத்து வந்ததைத் தொடர்ந்து மஸ்லீ மீது ஏமாற்றம் அடைந்ததால் மகாதீர் இந்த முடிவை எடுத்ததாக மலேசியன் இன்சைட் இணையதளம் தகவல் வெளியிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மஸ்லீக்கு எழுதிய கடிதத்தில் அவரைப் பதவி விலகும்படி டாக்டர் மகாதீர் கேட்டுக் கொண்டதாகவும் இந்தக் கடிதம் அதே நாளன்று சிம்பாங் ரெங்கத்திலுள்ள அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அப்போது தமது குடும்பத்தினரோடு மஸ்லீ அமெரிக்காவில் விடுமுறையில் இருந்துள்ளார். ஜாவி எழுத்து போதனை, பள்ளிகளில் இணைய சேவை விநியோகம் மற்றும் இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் தொடக்கநிலை பள்ளிகளுக்கான இலவச சிற்றுண்டி திட்டம் போன்ற விவகாரங்களில் அமைச்சரவையின் உத்தரவைப் பின்பற்றத் தவறிவிட்டதாக 17 பத்திகளைக் கொண்ட அந்தக் கடிதத்தில் மகாதீர் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்பட்டது.
அந்தக் கடிதத்தின் இறுதியில் நீங்கள் அமைச்சரவையில் இருந்து விலகிச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்ற தமது கருத்தையும் மகாதீர் வெளியிட்டிருந்ததாகவும் தெரிகிறது.
எனினும் இந்த அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காக மஸ்லீயிடம் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் மலேசியா கினி இணையதள பதிவேடு கூறியது.
டாக்டர் மகாதீரைச் சந்தித்த பின்னர் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமையன்று செய்தியாளர் கூட்டத்தில் மஸ்லி அறிவித்தார். ஜனவரி 3ஆம் தேதி முதல் தமது பதவி விலகல் அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.