வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் இரு பிரிவினர் இடையே மோதல்!

விருதுநகர் –

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் இருபிரிவினர் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழ்குடி, செங்குளம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வாகனங்களில் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தனர்.

பரளச்சி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சத்தமாக கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் வாகனங்களில் வந்தவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.

இதில் சில வாகனங்களும் சேதமடைந்தன. வாகனங்களில் கற்களை வீசித் தாக்கியதால் ஆத்திரமடைந்தவர்கள் தங்கள் பகுதியான கீழ்குடி, செங்குளம் பகுதிக்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளனர்.

தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆட்களை அழைத்துக் கொண்டு மோதலில் ஈடுபடுவதற்காக மீண்டும் பரளச்சி நோக்கி வாகனங்களில் வந்துள்ளனர்.
இதனை அறிந்து மற்றொரு பிரிவினர் அங்கே தயாராகக் காத்துக் கொண்டிருந்தனர். திடீரென பரளச்சி காவல் நிலையம் அருகிலேயே இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது.

இதையடுத்து பரளச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here