வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது என சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான், தேவி! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.


முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி” என்ற சிறப்புப் பெயருண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்தி பெற்று மோட்ச கதியை பெறுவார் என்றார்.
ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது. ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.
பீமன் ஒரு ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓரு ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.