ஜோகூர் பாரு –
அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் அறிவியல் புத்தாக்கங்களில் சாதனை படைத்து வருகின்றனர். 2019 யூபிஎஸ்ஆர் தேர்வில் மற்ற மொழிப் பள்ளிகளையும் மிஞ்சி முதல் இடத்தை பிடித்தது ஒரு தனித்துவமிக்க வரலாறு.
அவற்றிற்கான காரணங்களுள் சில கற்றலுக்கு உகந்த பள்ளிச் சூழல், திறன் பெற்ற ஆசிரியர்கள், நவீன வசதிகள், ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அரவணைப்பு; பெற்றோர் – ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியங்கள் போன்றோரின் அரிய பணியும் ஒத்துழைப்பும் ஆகும்.
எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புகளையும் வெற்றிகதைகளையும் மலேசிய மக்களுக்கு எடுத்தியம்புவதோடு முதலாம் ஆண்டு மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு நம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு தயங்காமல் அனுப்பவேண்டும்.
2020இல் ஜோகூர் மாநில பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை காண்போம். கடந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டில் புதிய பள்ளி கட்டடத்திற்கு மாறிய தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
2020இல் 70 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிந்துள்ளனர். 2019ஆம் ஆண்டைவிட 20 மாணவர்கள் அதிகம். 2019 யூபிஎஸ்ஆர் தேர்வில் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றதால் பெற்றோரின் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என தலைமை ஆசிரியர் குணசேகரன் கூறினார்.
இடப் பற்றாக்குறையால் காலை மாலை என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்றார். தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ டாக்டர் புருஷோத்தமன் பள்ளியின் தரத்தை உயர்த்தினால் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என்றார். நம் பிள்ளைகள் 60 ஆயிரம் பேர் மற்ற மொழிப் பள்ளிகளில் பயில்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகள் காலத்தால் நிலைத்து நிற்க வேண்டுமானால் பெற்றோர் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்றார்.
மவுன்ட் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளியில் புதிய ஆண்டில் 100 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிந்துள்ளனர். 2019 ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 65 மாணவர்கள்தான் பதிந்திருந்தனர் என தலைமை ஆசிரியர் திருமதி இராஜம்மா கூறினார்.
மாசாய் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 163 மாணவர்கள் பதிந்துள்ளனர். 2019 ஆண்டில் 145 மாணவர்கள்தான் பதிந்திருந்தனர் என மாணவர் நல துணை தலைமை ஆசிரியர் சிவசுப்ரமணியம் கூறினார். இப்பள்ளியில் இப்போது மொத்தம் ஆயிரம் பேர் பயில்கிறார்கள்.
2019 யூபிஎஸ்ஆர் தேர்வில் ஜோகூர் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்த துன் அமினா தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டில் 340 மாணவர்கள் பதிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தலைமை ஆசிரியர் ரவீந்திரன் கூறினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் 10 வகுப்பறைகள் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
தங்காக் புக்கிட் சிரம்பாங் தமிழ்ப்பள்ளி ஜோகூர் புக்கிட் இண்டாவுக்கு இடம் மாற்றம் பெற்று இன்று சகல வசதியுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. பழைய பள்ளியில் இரண்டே மாணவர்கள்தான். இன்று புதிய பள்ளியில் 450 மாணவர்கள் பயில்கிறார்கள். வகுப்பறைகள் பற்றாக்குறையினால் இரண்டு வேளை காலை மாலை என பிரிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் போக்குவரத்து, இட வசதி இருப்பதால் மாணவர்கள் அதிகரிப்புக்குக் காரணம் என்று தலைமை ஆசிரியர் அ. உதயலட்சுமி தெரிவித்தார்.