முன்னாள் எம்ஏசிசி தலைவருடன் நஜிப்பின் தொலைபேசி உரையாடல் பதிவுகள்: கிரிமினல் சதி

புத்ராஜெயா –

1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசா க் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று வெளியிட்டது.

அவற்றில் நஜிப் மற்றும் எம்ஏசிசி முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அமாட், நஜிப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், ஐக்கிய அரபு சிற்றரசின் பெரும் புள்ளிகள் சிலர் ஆகியோரின் குரல் பதிவுகள் அடங்கும். நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ் மற்றும் 1எம்டிபி நிதி பறிமுதல் வழக்குகள் ஆகியவை தொடர்பாக அமெரிக்க நீதித் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியதாக அந்த உரையாடல்கள் இருந்தன.

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா எரிச்சலுடன் நஜிப்பிடம் கத்திப் பேசும் குரல் பதிவும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த அனைத்து தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் 2016 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்றிருக்கின்றன.

புத்தாண்டுக்குப் பிறகு அநாமதேய வட்டாரங்களிடம் இருந்து இந்தக் குரல் பதிவுகளை எம்ஏசிசி பெற்றதாக அதன் தலைமை ஆணையர் லத்திபா கோயா நேற்று புத்ரா ஜெயா தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் அம்பலப்படுத்தினார்.

இக்குரல் பதிவுகள் மீது நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனைகளில் அவை உண்மையானவை என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இட்டுக்கட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதால் இந்தக் குரல் பதிவு ஆடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர் கூறினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக இக்குரல் பதிவுகள் போலீசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

2016 ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்ற முதல் உரையாடலில் ஸுல்கிப்ளி, டத்தோஸ்ரீ நஜிப்பிடம் புலனாய்வு அறிக்கைகள் குறித்து தாம் திகைப்படைவதாக முறையிடுவது செவிமடுக்கப்பட்டது. ஸுல்கிப்ளி அப்போது அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் பொறுப்பில் இருந்தார். ஸுல்கிப்ளியிடம் இருந்து வந்த அழைப்புக்கு முதலில் பதில் பேசியவர் ரோஸ்மா. புலனாய்வு அறிக்கையில் டத்தோஸ்ரீ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது நஜிப்பைக் குறிப்பதாக உள்ளது என்று ஸுல்கிப்ளி தகவல் தெரிவித்தார்.

அதன்பின்னர் அந்த அழைப்பு நஜிப்புக்கு மாற்றப்பட்டது.
ஸுல்கிப்ளி: என்னிடம் அந்தப் புலனாய்வு அறிக்கை இருக்கிறது. அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ அபாண்டி அலி நல்ல மனிதர். நம்முடைய சிந்தனைக்கு ஒத்துப்போகக்கூடியவர். இந்த அறிக்கையில் எம்ஏசிசி செய்துள்ள பரிந்துரை குறித்து டத்தோஸ்ரீக்கு (நஜிப்) தகவல் சொல்ல விரும்புகிறேன்.
நஜிப்: இது சரியாக இல்லை.
ஸுல்கிப்ளி: இதுதான் எங்களுக்கும் கவலையாக இருக்கிறது. சட்டரீதியில் பார்க்கும்போது எங்களால் அதனைச் சமாளிக்க முடியும். அபாண்டியாலும் முடியும் என்னாலும் முடியும்.
தொடர்ந்து நஜிப் மிகுந்த சலிப்புடன் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் குறிப்பிடுகிறார். வியாழக்கிழமை (2016 ஜனவரி 7) அட்டர்னி ஜெனரலைத் தாம் சந்திக்கவிருப்பதாகவும் நஜிப் கூறியது அக்குரல் பதிவில் இடம்பெற்றுள்ளது.
2016 ஜனவரி 26ஆம் தேதி அபாண்டி பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டி, 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி விவகாரங்களில் நஜிப் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிவித்தார்.
இந்த உரையாடல்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கே சவால் விடுவதாக இருக்கின்றன. ஸுல்கிப்ளி நஜிப்பிடம் எல்லாத் தகவல்களையும் கசிய விட்டிருக்கிறார். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நஜிப்தான் இவ்விவகாரத்தின் சாத்தியப்பூர்வமான சந்தேகப்பேர்வழியாக இருந்தார் என்று லத்திபா கூறினார்.

இச்செயல் அதிகாரப்பூர்வ ரகசிய காப்புச் சட்டத்தை அத்துமீறியதாகவே இருக்கிறது. இந்தக் குரல் பதிவு ஆடியோ கிளிப் மூலம் பல்வேறு கடுமையான விவகாரங்கள் தலையெடுத்திருக்கின்றன. அவற்றில் அதிகாரத்துஷ்பிரயோகம், கிரிமினல் சதி, நீதிக்கு இடையூறு, தேசியப் பாதுகாப்பு மிரட்டல், அந்நிய உதவியுடன் போலி ஆதாரங்கள் திரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இந்த ஆதாரங்களைச் சம்பந்தப்பட்ட துறைகளிடம் புலன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படியும் தாம் தம்முடைய அதிகாரிகளைப் பணித்திருப்பதாக லத்திபா கூறினார்.
இந்த மூடிமறைக்கும் முயற்சிகள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன என்ற லத்திபா, இந்தக் குரல் பதிவுகளில் இடம்பெற்றுள்ள தனிநபர்களில் தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், நஜிப்பின் முன்னாள் பிரதான தனிச்செயலாளர் டான்ஸ்ரீ ஸுக்ரி முகமட் சாலே ஆகியோரும் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here