ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அணு ஆயுதச் சோதனை காரணமா?

தெஹ்ரான் –

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்நாடு நடத்திய அணு ஆயுதச் சோதனை காரணமாக இருக்கலாம் என உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. சில தினங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்திலும் ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள எர்பில் தளத்திலும் ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்தது. ஆனால் இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.

இதனிடையே ஈரானில் நேற்று முன்தினம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அணு மின் நிலையம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஈரானின் வளைகுடா கடற்கரைப் பகுதிக்கு அருகிலுள்ள பஷர் நகரில் அணு மின் உற்பத்தி மையம் உள்ளது. இந்த மையத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் காலை 6.49 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அணு உலை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதச் சோதனை ஏதும் நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here