பினாங்கில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது!

ஜார்ஜ் –

நாட்டில் இந்திய வெங்காயத்தின் விலையில் மிகக்கடுமையான ஓர் இடத்தை பினாங்கு பதிவு செய்திருக்கிறது. இங்கு ஒரு கிலோ இந்திய வெங்காயம் 24 வெள்ளிக்கு விற்கப்படுகிறது என்பதை அரசாங்க விலை கண்காணிப்பாளர்கள் நேரில் கண்டுபிடித்துள்ளனர்.

வெங்காயத்தின் விலை பினாங்கில் நேற்று கிலோ ஒன்றுக்கு 4.90 வெள்ளியில் இருந்து 24 வெள்ளி வரை விற்கப்பட்டிருக்கிறது என்று உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
தேசிய பொருட்கள் விலை மன்றம் இந்த ஆய்வினைச் செய்திருக்கின்றது என்று அவர் சொன்னார். விலைக் கட்டுப்பாட்டு மற்றும் பறிமுதல் சட்டத்தின் கீழ் இந்த விலையில் வெங்காயத்தை விற்க வேண்டாம் என்று கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இறக்குமதியாளர்கள் அல்லது விநியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கும் அசல் விலையைச் சில்லறை வியாபாரிகள் ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இங்கு பாலேக் பூலாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். நாட்டில் வெங்காய சப்ளை போதுமான அளவில் இருக்கிறது. இருப்பினும் இந்திய வெங்காயத்தின் மீது மலேசியர்களுக்கு உள்ள மோகம் இந்த விலை ஏற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா கடந்த செப்டம்பரில் இருந்து மலேசியாவுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெதர்லாந்து, சீனா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமான வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனாலும் மலேசியர்கள் விலை அதிகமானாலும் இந்திய வெங்காயத்தையே அதிகமாக விரும்புகின்றனர் என்று சைபுடின் தெரிவித்தார்.

மலிவு விலையிலான இந்திய வெங்காயங்களை விநியோகஸ்தர்கள் பதுக்கி வைத்துள்ளனர் என்று சொல்லப்படுவதற்கு காரணம் கேட்டபோது, தம்முடைய அமைச்சு இதுவரை இப்படியொரு புகாரைப் பெற்றிருக்கவில்லை என்று சைபுடின் பதிலளித்தார்.

இதனிடையே, வரும் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையை நிர்ணயிப்பது குறித்து தம்முடைய அமைச்சு விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பாலேக் பூலாவில் உள்ள டிஎஃப் வேல்யூ மார்ட் புதிய பேரங்காடியில் ஒரு கிலோ வெங்காயம் 98 காசுக்கு விற்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். பினாங்கிலுள்ள பல ஹைப்பர் சந்தைகளில் இதே வெங்காயம் ஒரு கிலோ 3.28 வெள்ளியாக விற்கப்படுகிறது. இந்திய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 6 வெள்ளி என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here