பிந்தார் திட்டத்தின் வாயிலாக கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியை தெஸ்கோ நிறுவனம் தத்தெடுத்தது

கூலாய் –

கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கி மலேசியாவில் கால்பதிக்கத் தொடங்கிய தெஸ்கோ குழுமம் (Tesco) அவ்வப்போது சமூகக் கடப்பாட்டுடன் பல உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிறுவனம் பல உதவிகளைப் புரிந்து வருகிறது.

அவற்றுள் ஒன்றாக இந்நிறுவனம் பிந்தார் திட்டத்தின் (Pintar) வாயிலாக கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி பல பள்ளிகளைத் தத்தெடுத்து வருகின்றது. நாடு தழுவிய அளவில் இந்தத் திட்டத்தின் வாயிலாக தெஸ்கோ நிறுவனம் இதுவரை 63 பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளது. அவற்றின் மொத்த மாணவர் எண்ணிக்கை 57 ஆயிரம் ஆகும்.

இந்தப் பிந்தார் திட்டமானது வசதி குறைந்த பள்ளிகளை அடையாளம் கண்டு அதனை 3 வருடங்களுக்குத் தத்தெடுத்து உதவிகள் வழங்கும் ஒரு செயற்பாடாகும். கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பிந்தார் அறக்கட்டளையின் வாயிலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டிலுள்ள பெருநிறுவனங்கள் இந்தப் பள்ளிகளைத் தத்தெடுத்து வருகின்றன.

இதனிடையே, தெஸ்கோ நிறுவனம் நாடு தழுவிய அளவில் இந்த பிந்தார் திட்டத்தின் வாயிலாகத் தற்போது ஐந்து தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுத்து உதவிகள் வழங்கி வருகிறது. மலாக்கா, சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தமிழ்ப்பள்ளியையும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் இரண்டு தமிழ்ப்பள்ளிகளையும் இந்நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி தத்தெடுக்கப்பட்டுள்ள கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்நிலையில் தெஸ்கோ நிறுவன அதிகாரிகள் அப்பள்ளிக்கு அண்மையில் சிறப்பு வருகை புரிந்தனர். அங்கு அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடியது மட்டுமன்றி சில சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி அவர்களை மகிழ்வித்தனர்.

இது குறித்து தெஸ்கோ நிறுவனத்தில் கூலாய் வட்டார அதிகாரி சேம் கூறுகையில், இதுவரை இந்தப் பிந்தார் திட்டத்தில் தெஸ்கோ நிறுவனம் இணைந்து சுமார் 45 லட்சம் வெள்ளி வரை செலவிட்டுள்ளது. இந்தத் தொகை வெறும் செலவாகக் கணக்கெடுத்துக்கொள்ள முடியாது. மாறாக மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக முன்வைக்கப்பட்ட முதலீடாகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட ‘Walk For Kids’ எனும் சிறப்பு தொண்டூழிய நடைப்பயண நிகழ்வில் இதுவரை சுமார் 12 லட்சம் வெள்ளி வரை திரட்டப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற இந்த நிகழ்வில் மொத்தமாக சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.

2017ஆம் ஆண்டு இந்நிகழ்வு கோலாலம்பூரிலும் 2018ஆம் ஆண்டு பேராக்கிலும் கடந்தாண்டு (2019) ஜோகூரிலும் நடைபெற்றது. இதில் ஜோகூரில் நடைபெற்ற நிகழ்வில் திரட்டப்பட்ட நிதியில் இந்தப் பள்ளிக்கு குறிப்பிட்ட தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே வசதி குறைந்த பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயிலும் இப்பள்ளியை தெஸ்கோ நிறுவனம் தத்தெடுத்து உதவிகள் செய்துவருவது பாராட்டுக்குரியது. தத்தெடுத்த காலம் தொடங்கி இதுவரை அந்நிறுவனம் பல வசதிகளைச் செய்துகொடுத்துள்ளது.

குறிப்பாக திடலைச் சுற்றி வேலி, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான சிறப்பு அறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அவர்களின் இந்த உதவி வருங்காலத்திலும் தொடரும் என நாங்கள் நம்புகிறோம் என கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் விசாலட்சுமி தெரிவித்தார்.

தற்போது நாடு தழுவிய அளவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கிளைகளைக் கொண்ட தெஸ்கோ நிறுவனத்தில் சுமார் 7,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அண்மையில் இணையம் வாயிலாகவும் தெஸ்கோ நிறுவனம் தனது விற்பனைச் சேவையைத் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here