லண்டன் –
பிரிட்டிஷ் இளவரசர் ஹெரியும் அவரின் துணைவியார் மேஹனும் இனியும் அரச குடும்ப உறுப்பினர்கள் அல்லர் என்று பக்கிங்ஹாம் மாளிகை நேற்று அறிவித்தது.
தாங்கள் அரண்மனை வாழ்க்கையைத் துறந்து சாதாரண மக்கள்போல் வாழப்போவதாக அத்தம்பதி அறிவித்த பத்து நாட்களுக்குப் பிறகு பக்கிங்ஹாம் மாளிகை இதனை அறிவித்துள்ளது.
சசெக்ஸ் கோமகன் என்றும் சசெக்ஸ் கோமகள் என்றும் அறியப்படுபவர்களான ஹெரியும் மேஹனும் இனிமேல் மேன்மை தங்கிய எனும் விருதுகளை பயன்படுத்த மாட்டார்கள். அதிகாரத்துவ ராணுவ நியமனம் உள்ளிட்ட அரச கடமைகளை ஆற்றுவதையும் அவர்கள் நிறுத்திக் கொள்வார்கள். அரச கடமைகளுக்காக அரசாங்கம் அளிக்கும் ஊதியத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள் என்று அறிக்கையொன்றின் வழி பக்கிங்ஹாம் மாளிகை தெரிவித்துள்ளது.
இப்புதிய நடவடிக்கை இவ்வாண்டு கோடை காலத்திலிருந்து நடப்புக்கு வரும். ஆயினும், அத்தம்பதியின் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான நிதி எத்தரப்பினால் வழங்கப்படும் என்பது குறித்து அந்த அறிக்கை எதுவும் தெரிவிக்கவில்லை.
இளவரசர் தம்பதியின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்துரைத்துள்ள பிரிட்டனின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, முடியாட்சித் தலைமைத்துவத்தின் இரும்புப் பிடியை அரசி இரண்டாவது எலிசபெத் தகர்ந்தெறிந்து விட்டார் என்று தெரிவித்துள்ளது.
இளவரசர் ஹெரி மற்றும் மேஹனின் முடிவுக்கு ஹெரியின் பாட்டியாருமான எலிசபெத் ஆதரவு தெரிவித்துள்ளார். அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் எனும் அந்தஸ்தை துறக்கப் போவதாக இம்மாதம் எட்டாம் தேதியன்று ஹெரியும் மேஹனும் அறிவித்திருந்தனர்.
முற்போக்கான புதிய வாழ்க்கையை வாழப் போவதாகவும் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் மாறி மாறி வசித்து வரப் போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
முன்னாள் நடிகையான மேஹன் அமெரிக்கர் ஆவார். மேஹனின் தாயார் கறுப்பினத்தவர் என்பதால் இனவாதத் தாக்குதலுக்கு அவர் ஆளாகி வந்தார். இதனால், அத்தம்பதி தங்களின் அரச பொறுப்புகளைத் துறந்ததாக நம்பப்படுகிறது.