பினாங்கில் தங்க – வெள்ளி ரத பிணக்கு ஓய்ந்தது

ஜார்ஜ்டவுன் –

கடந்த மூன்று ஆண்டுகளாக பினாங்கு மாநில தைப்பூசத் திருவிழாவில் தங்க ரதம் – வெள்ளி ரதம் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கும் இருந்து வந்த பிணக்குகள் அகன்று இன்று புயல் ஓய்ந்து தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.

பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் 2020ஆம் ஆண்டுக்கான வெள்ளி ரத ஊர்வலத்திற்கான ஆயத்தப் பணிகள் முடிந்து வெள்ளி ரத ஊர்வலத்திற்குத் தயார் நிலையில் இருப்பதாக பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் கோயில் வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தைப்பூச விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சோ. வீரப்பன் கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அறங்காவலர்களில் ஒருவரான அழ. லெட்சுமணன் கலந்துகொண்டதுடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தங்க ரதமும் பினாங்கு நகரத்தாரின் வெள்ளி ரதமும் அரைமணி நேர வித்தியாசத்தில் செல்வதற்கு இணக்கம் கண்டுள்ளதாகக் கூறினார். பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரின் வெள்ளி ரத ஊர்வலம் 126ஆம் ஆண்டாகப் பயணிப்பதாக நகரத்தார் ஆலயத்தின் அறங்காவலர்கள் விவரித்தனர்.

இந்த 2020ஆம் ஆண்டு ரத ஊர்வலம் 7.2.2020ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு பினாங்கு ஸ்திரீட் கோயில் வீட்டிலிருந்து சக்தி வேல் முருகனுக்கு பூஜை செய்து ஜாலான் கெபூன் பூங்காவில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை அதிகாலை 4.00 மணிக்குச் சென்று அடையும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தைப்பூச விழாவில் இரு ரதங்கள் புறப்படும் என்பதனால் கடந்த காலத்தில் உள்ள ரத ஊர்வலப் பிரச்சினைகள் எழாது என்பதுடன், பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் டத்தோ எம். இராமச்சந்திரனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளதால் இவ்வாண்டு தைப்பூச ரத ஊர்வலம் அரை மணி நேரம் முன்னும் பின்னும் சுமுகமாக நடைபெறும் என்றும் சோ. வீரப்பன் விவரித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரான பேராசிரியர் ப. இராமசாமி மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பொது மக்களின் நலனை முன்னிருத்தி சுமுகமான ரத ஊர்வலம் காண இருதரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரத ஊர்வலம் அன்று காலை 6.15 மணிக்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் ஏற்பாட்டிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தங்க ரதம் குயின் ஸ்திரீட் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட உள்ளதால், அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகு நகரத்தாரின் வெள்ளி ரதம் புறப்படும் என்பதுடன் இதனால் இரு ரதங்களுக்கிடையே இடைவெளி இருப்பதால் வீதி ஊலாவில் எவ்விதப் பிரச்சினையும் எழாது என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here