ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்

சென்னை –

தமிழகத்திற்கு மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கினார். டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் மற்றொரு சகோதரர் திவாகரனுக்கு ஏற்பட்ட மோதலால் திவாகரன் தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார்.

ஆனால் தினகரனைபோல கட்சியை திவாகரனால் வளர்த்தெடுக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் திவாகரன் திமுகவில் இணையப்போவதாக அரசியல் களத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் திமுக பிரமுகர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட திவாகரன் திமுகவுக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திவாகரன், தமிழ் மற்றும் தமிழகம்தான் நமக்கு முக்கியம். அதை காப்பவர்கள் பின்னால் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் எனப் பேசியுள்ளார்.

மன்னார்குடி வட்டாரத்தில் திவாகரனுக்கு செல்வாக்கு உள்ள நிலையில் வலுவிழந்து வரும் அமமுகவுக்குள் அவரை நுழைத்து விட உள்ளூர் பிரமுகர்கள் பேசி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திவாகரன் திமுகவுக்கு ஆதரவாக பேசியிருப்பதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் திவாகரன் திமுக பக்கம் கூட்டணி அமைக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் அந்த மேடையிலேயே டிடிவி. தினகரனை மறைமுகமாகச் சாடியுள்ள திவாகரன், நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. சிலருக்கு இடைஞ் சல் செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன் எனப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here