கணிதம் – அறிவியல் போதனைக்கு மீண்டும் ஆங்கிலம்: பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா –

கணிதம், அறிவியல் பாடங்கள் மீண்டும் ஆங்கில மொழியிலேயே போதிக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

மற்றப் பாடங்களை நாம் தாய்மொழிகளில் படித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த இரண்டு பாடங்களும் மிகவும் முக்கியமானவை. எனவேதான் அந்தப் பாடங்களை மீண்டும் ஆங்கில மொழியில் போதிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

நேற்று புத்ராஜெயாவில் கல்வி அமைச்சரக நிர்வாக அதிகாரிகளுடனான சிறப்புச் சந்திப்பின்போது இடைக்கால கல்வி அமைச்சருமான மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதலாம் வகுப்பிலும் முதலாம் படிவத்திலும் ஆறாம் படிவத்திலும் ஆங்கில மொழியில் கணித, அறிவியல் பாடங்கள் போதிக்கப்பட்டன. அப்போது மகாதீர்தான் பிரதமராகப் பதவி வகித்தார்.

கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிக்கும் திட்டம் 2013ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. மலாய்மொழியில் இந்த இரண்டு பாடங்களையும் போதிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த இரண்டு பாடங்களையும் மீண்டும் ஆங்கில மொழியில் போதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றார் மகாதீர்.

வரலாறு, பூகோளம் போன்ற பாடங்களை எந்த மொழியிலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் கணிதம், அறிவியல் பாடங்கள் அப்படி அல்ல. அவை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்ற பாடங்கள்.

அறிவியல், கணிதப் பாடங்களை மலாய்மொழியில் கற்றுத் தேர்ந்தாலும் வேலைக்குச் செல்கின்ற நிலையில் அங்கு ஆங்கிலம்தான் அவசியமாகத் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here