துர்க்கை அம்மனுக்கு ராகுகால விளக்கு

துர்க்கை அம்மனுக்கு ராகுகால விளக்கு ஏற்றும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்! இந்த வழிமுறையை பின்பற்றினால் தான் பலம்.  பொதுவாகவே எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றினால் சரியாகிவிடும் என்பது நாம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று செய்யும் இந்த வழிபாட்டை சரியாகத்தான் செய்கிறீர்களா?
தீராத பிரச்சனைக்கு தீர்வு காண, அந்த பிரச்சினையின் தாக்கம் குறைய, செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.00 – 4.30 மணிக்குள் ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை பழத்திலோ, அகல் தீபத்திலோ விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி தீபமேற்றும் போது கட்டாயம் 5 இதழ்களைக் கொண்ட நூல் திரி போட்டு தீபம் ஏற்றுவது சிறந்தது. இரண்டு விளக்கையும் ஜோடியாகத்தான் வைக்க வேண்டுமே தவிர, தனி தீபம் ஏற்றக்கூடாது. தீப ஒளியானது அம்மனை நோக்கித்தான் இருக்க வேண்டும். நல்லெண்ணையில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது.
அதுவே, தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், ஞாயிறு மாலை 4.30-6.00 மணிக்குள் ராகு கால வேளையில் மேலே குறிப்பிட்டுள்ளவாறு துர்க்கைக்கு தீபம் ஏற்றவேண்டும். நிச்சயமாக உங்களது உடல் உபாதையில் இருக்கும் தாக்கம், இந்த வழிபாட்டின் மூலம் குறைக்கப்படும். நமது குடும்பத்திற்காக வைக்கப்படும் வேண்டுதல்கள், நமது குடும்பத்தின் நலனை பெறவேண்டுமென்றால் வெள்ளிக்கிழமை 10.30-12.00 மணிக்குள் மேலே குறிப்பிட்டுள்ள வாறு தீபமேற்ற வேண்டும்.  
இதில் எந்த ராகு கால பூஜைக்கு சென்றாலும் அம்மனுக்கு ‘மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ’ இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை வாங்கி சென்றால் நல்ல பலனைத் தரும். நீங்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால், சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்த பின்பு தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றிய பின்பு துர்க்கை அம்மனை மூன்று முறை வலம் வருவது நல்ல பலனைத் தரும். அதன் பின்பு நமஸ்காரம் செய்துகொண்டு, 20 நிமிடம் துர்க்கை அம்மன் முன்பாக அமர்ந்து, முடிந்தால் துர்க்கை பாடல்களை சொல்லலாம்.
முடியாதவர்கள் அம்பாளின் பெயரை உச்சரித்துக் கொண்டு மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். சரியாக 21-வது நிமிடம் கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.  வீட்டிற்கு வந்த பின்பு வீட்டில் ஒரு நெய் தீபம் ஏற்றி, 3 ஊதுவத்திகள் ஏற்றப்பட்டு, தீப தூப ஆராதனை செய்து, வீட்டிலுள்ள இறைவனையும் வழிபட்டு விட்டு, நிம்மதியாக ஓய்வெடுப்பது நல்லது.
வீட்டில் தீபம் எரியும் வரை, வெளியில் எங்கும் சென்றுவிட வேண்டாம். முடிந்தவரை ராகுகால வழிபாட்டின்போது, மற்றவர்களிடம் பேசும் அனாவசிய பேச்சைத் தவிர்த்து, மனதை ஒருநிலைப்படுத்துவது சிறந்த பலனைத் தரும். இப்படியாக முறையான வழிபாட்டினை துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் செய்தால் நாம் வேண்டிய பலன் கைமேல் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here