வளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா?

வளமிகுந்த காடுகளை வலுவிழக்கச் செய்யலாமா?

மார்ச் -11

சிலாங்கூர் மாநிலத்தின் கோலலங்காட் உத்தாரா பூங்காட்டுப் பிரச்சினைதான் பற்றி எரியும் பெரும் பிரச்சினையாக புதிதாக உருவெடுத்துள்ளது.

காடுகள் பற்றி எரிவதும்…

காடுகளை தரம் மாற்றி அதனை மேம்பாட்டுக்காக எடுத்துக் கொள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்வதும் என…

இருபக்கத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது கோலலங்காட் உத்தாரா பூங்காடு!

பற்றி எரியும் பிரச்சினைக்கான தீர்வுதான் என்ன என்பது குறித்து இந்தப் பூங்காட்டில் 134 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தைத் தேடி அலைந்து வரும் பூர்வ குடியினர் ஒரு பக்கம் வயிறு எரிந்துக் கிடக்கிறார்கள்.

எங்கு நோக்கினும் எரியுதடா வயிறு என்ற நிலைதான் இங்கு உள்ளது.

ஜெஞ்சாரோம் நகரிலிருந்து கிழக்கே நோக்கி பழைய கிராமத்துச் சாலையில் பயணித்தால் கம்போங் ஸ்ரீசீடிங் கிராமம் வருகிறது. அதற்கு அப்பால் புக்கிட் சீடிங் தேயிலைத் தோட்டம் உள்ளது. தேயிலைத் தோட்டத்திற்கும் புத்ரா ஜெயாவுக்கும் நடுவில்தான் சர்ச்சைக்குரிய கோலலங்காட் பூங்காட்டுப் பகுதி உள்ளது.

கோயில்களுக்கும் வீடுகளுக்கும் மாற்று நிலம் தருகிறோம் என்ற நிலை போய்விட்டது. இப்போது இந்தப் பூங்காட்டுப் பகுதியை தரம் மாற்றி அதற்கு வேண்டிய மாற்று பூங்காட்டை வழங்குகிறோம் என்பது வரையில் வெகு ஆவலுடன் பந்தி விரிப்பை தொடங்கி விட்டது மந்திரி பெசார் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு.

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு வாரியமோ எந்த மேம்பாடுகளுக்காகவும் காடுகள் எரிக்கப்படவில்லை. அவை குப்பை எரிப்பு காரணமாக எரியும் நிலைக்கு சென்று விட்டது என அறிவிக்கிறது.

கிழக்கே புத்ரா ஜெயாவுக்கும் மேற்கே பந்திங் வட்டாரத்திற்கும் நீர்ப்பசுமையை எப்போதும் பாய்ச்சிக் கொண்டிருக்கும் இக்காடுகள் அழியும் நிலை ஏற்பட்டால் சிலாங்கூர் மாநிலம் மேலும் ஒரு பிடி வளர்ச்சியைக் வெளியேற்றி ஒரு பிடி வறட்சியை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை வரலாம்.

இந்த 900 ஏக்கர் பரப்பளவு நிலம் புத்ரா ஜெயாவுக்கும் சைபர் ஜெயாவுக்கும் மிக அருகில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ஓரங்கட்டி வைத்து விட்டால் இந்தக் காடு எரிவதற்கும் காட்டை தரமாற்றம் செய்வதற்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். யாருமே கண்டு கொள்ளாத பகுதியாக இது நிலைத்திருக்கும். காட்டு விலங்கினங்களுக்கும் மனிதனால் கேடு விளையாமல் இருக்கும்.

மேம்பாடு என்ற பெயரால் தோட்டங்களை துவம்சம் செய்த அதே மேம்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் ‘ரிசர்வ் நிலம்’ என்ற தகுதி கொண்ட பூங்காடுகள் மீதும் கை வைக்கும் புதிய போக்கை மலேசியா காணத் தொடங்கியிருக்கிறது.

காடுகளை அழிப்பது என்பது அந்தக் காடுகளை நம்பி வாழும் காட்டு விலங்கினங்களையும் தாவர இனங்களையும் தயவு தாட்சண்யம் இன்றி அழிப்பது என்பதாகும்.

வாழ்விடத்தை அழித்து விட்டால் மனிதர்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொள்ளலாம். விலங்குகள் அப்படியல்ல. 1970ஆம் ஆண்டு தொடங்கி 60 விழுக்காட்டு விலங்கினங்களை மனித இனம் அழித்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.

மேம்பாட்டைக் காரணம் காட்டி கோலலங்காட் உத்தாரா காடுகளை அழிக்க நினைக்கும் தரப்பு மீது அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.

நிலத்தின் மீதானதல்ல மேம்பாடு…. மனிதம் மீதானதுதான் உண்மையான மேம்பாடு.

உலகுக்கு இதனை எடுத்துக் காட்டுமா மலேசியா அரசு?

மு.ஆர்.பாலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here