வரும் 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஸ்டாலினுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று கூறினார் ரஜினிகாந்த்.
வரும் 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் மு.க ஸ்டாலினுக்கு வாழ்வா, சாவா போன்றது என ரஜினி கூறியதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். கட்சி தொடங்குவது குறித்த தனது அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கட்சி தொடங்குவது குறித்து உறுதியான எந்த கருத்தையும் ரஜினி தெரிவிக்கவில்லை. இருப்பினும், தனது அரசியல் பார்வையை தெரிவித்தார். மேலும், திமுக, அதிமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவை பற்றி கூறுகையில், கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமை இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வரும் 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஸ்டாலினுக்கு வாழ்வா? சாவா? போன்றது என்று கூறினார்.
ரஜினிக்கு பின்னால் இருந்து பாஜக தான் இயக்குகிறது என திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினி கருத்திற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், ரஜினிக்கு சக்தி இருந்தால் வெற்றிடத்தை நிரப்பட்டும் என்றார். மேலும், 2021 தேர்தல் திமுகவிற்கு வாழ்வா சாவா என்ற ரஜினி கூறியதற்கு, திமுகவிற்கு வாழ்வுதான் என துரைமுருகன் பதிலளித்துள்ளார்.