கோப்பன்ஹேகன், மார்ச் 25-
உலகையே அச்சுறுத்தியுள்ள கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் எதிர்ப்பு விவகாரங்களுக்கு கார்ல்ஸ்பெர்க் (CARLSBERG) குழும அறவாரியங்கள் இணைந்து மொத்தமாக 6 கோடி வெள்ளியை (மலேசிய ரிங்கிட்) நன்கொடையாக வழங்கியுள்ளன.
இந்த நோய் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பல பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அவற்றை சரி செய்ய இக்குழுமத்தை சேர்ந்த கார்ல்ஸ்பெர்க் அறவாரியம், நியு கார்ல்ஸ்பெர்க் அறவாரியம், தோபோர் அறவாரியம் ஆகிய மூன்று சமூக உதவி அமைப்புகள் இணைந்து இத்தொகையை வழங்கியுள்ளன.
சமூகம், பொருளாதாரம், மனித வளம் மட்டுமல்லாது இந்த நோய் குறித்த ஆய்வுக்கும் இந்த அமைப்புகள் நன்கொடை வழங்கியுள்ளனர்.
அதிலும் நேரடியாக மக்களுக்கு இந்த உதவிகள் போய்ச் சேர வேண்டி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு இந்த அறவாரியங்கள் நன்கொடைக்கான நிதியை வழங்கியுள்ளனர்.
இதன் வழி அனைவரும் நன்மை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து கார்ல்ஸ்பெர்க் அறவாரியத்தின் தலைவர் பேராசிரியர் பிளாமிங் பெசன்பேச்சர் கூறுகையில், கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் தோற்றுனர்கள் ஜே.சி. மற்றும் கார்ல் ஜேக்கப்சன் இருவரும் மக்கள் நலனில் என்றும் அக்கறை கொண்டிருந்தனர்.
இந்த வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உலகம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த குறுகிய காலத்தில் எங்களால் முடிந்த உதவியை நாங்கள் வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.