புத்ராஜெயா –
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த மருந்தைச் சோதனை செய்ய மலேசியா தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக மோசமாகப் பரவி வருகிறது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் பணியில் உலக சுகாதார நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு கட்டமாக ரேம்டெசிவிர் என்ற புதிய மருந்தை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. இந்த மருந்தைச் சோதனை செய்ய பத்து நாடுகளை அது தேர்வுசெய்துள்ளது.
அந்தப் பத்து நாடுகளுள் மலேசியாவும் அடங்கும் என்று மலேசியப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது. இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறனும் ஆற்றலும் மலேசியாவுக்கு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.
தொற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு இந்த மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். அதன்மூலம் அந்த மருந்தின் பக்கவிளைவுகள், செயல் திறன் ஆகியவை கண்காணிக்கப்படும்.
உலகம் முழுவதும் இந்தப் புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதுகாப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிய உலக சுகாதார நிறுவனம் தீவிரம் காட்டுகிறது.