மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் இக்காலக்கட்டத்தில் நோன்புப் பெருநாள் பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
நோன்பைக் கடைப்பிடிக்கும் காலத்தில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு மக்களைக் கட்டிப் போட்டுவிடும் என்கிறார்கள்.
முதல் கட்டம் முடிந்து இரண்டாம் கட்டம் அமலில் இருக்கிறது. இரண்டாம் கட்டம் மக்கள் நடமாட்டத்தை சற்றே இறுக்கியிருக்கிறது. இதில் மக்களின் நடமாட்டம் என்பது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைவிட கட்டிப்போட்டதுபோல் இருப்பதாக உணர்கிறார்கள்.
இயல்பு வாழ்க்கையிலிருந்து மாறும்போது மாற்றம் என்பது ஏற்கமுடியாதது போல்தான் இருக்கும். இப்படி நடந்துகொள்வதும் நோன்பைப் போன்றதுதான் என்றும் பலர் கூறுகிறார்கள்.
நாட்டின் நிலைமை கருதி மாற்றத்திற்கு ஒத்துழைக்காவிட்டால் ஏமாற்றத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒத்துழையாமை தொடருமானால் அடுத்தக்கட்டம் வருவதையும் தடுக்கமுடியாது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். அப்படி வருமானால் நோன்பு நேரத்தில் மக்களின் நடமாட்டம் மாலை வேளைகளில் அதிகமாகவே இருக்கும்.
ஆனாலும் நோன்புக்காகத் திறந்திருக்கும் அங்காடிக் கடைகளுக்கு அனுமதியில்லை என்றும் தெரியவருகிறது. இதனால் நோன்பைக் கடைப்பிடிக்கும் மக்கள் நோன்புக்குபின் நோன்புத் திறப்புக்கு நிச்சயம் சிரமப்படுவார்கள்.
கட்டுப்பாட்டு மீறல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்புகள் கூடிவருகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
இதற்கான அடுத்தக் கட்டத் திட்டம் இப்போதே தயார் நிலையில் இருக்கவேண்டும். நிலைமை கடுமையாக இருந்தால் நோன்புப்பெருநாள் ஒத்திவைக்கும் சாத்தியம் இருக்கிறதா?