எனக்கு ‘93’ உனக்கு ‘88’ கொரோனாவை கொன்ற தம்பதியர்கள் – ருசிகரத் தகவல்

திருவனந்தபுரம்ஏப்ரல் 2-

 

இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது.

 

இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது.

 

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் பரவியது. (மகன், மருமகள், பேரன் ஆகிய மூவரும் குணம் அடைந்து விட்டனர்.)

 

வயதான நிலையிலும் கொரோனா வைரஸ் பாதித்தாலும் துவண்டுபோகாத இந்த தம்பதியர் கோட்டயம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். மோசமான நிலையை எல்லாம் கடந்து வந்தனர்.

 

தற்போது பூரண குணம் அடைந்துள்ள இந்த தம்பதியர் எந்த நேரத்திலும்டிஸ்சார்ஜ்செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கோட்டயத்தில் இருந்து வருகிற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிசய தம்பதியரை அனைவரும் வியப்புடன் பார்க்கும் நிலை வந்துள்ளது.

 

கொரோனா வைரசில் இருந்து அதிசயமாக, இந்த முதிய வயதிலும் மீண்டு வந்துள்ள தம்பதியரை வரவேற்க குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

இந்த தம்பதியர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பது குறித்து அவர்களது பேரன் ரிஜோ மோன்சி கூறுகையில், “எங்கள் தாத்தாவும், பாட்டியும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்ததால்தான் கொரோனா வைரசில் இருந்து மீண்டு வர முடிந்திருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறியதாவது:-

 

தாத்தாவிடம் மது, பீடி, சிகரெட், புகையிலை என எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. எந்த விதமான உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லாமலேகூட அவருக்குசிக்ஸ் பேக்உடல் அமைப்பு இருந்தது.

 

இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயில் அவர்கள் உயிர் பிழைத்தது அதிசயம்தான். அவர்களை காப்பாற்றுவதற்கு டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கேரள மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 

தாத்தாவுக்கு பழங்கஞ்சியும், தேங்காய் சட்னியும்தான் பிடித்த உணவு. ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபோது கூட அந்த உணவைத்தான் தாத்தா கேட்டார். மரவள்ளிக் கிழங்கும், பலாப்பழமும்கூட பிடிக்கும். பாட்டிக்கு மீன்தான் பிடித்தமான உணவு.

 

நாங்கள் இத்தாலியில் இருந்து எப்போது வருவோம் என்று தாத்தாவும், பாட்டியும் காத்திருந்தார்கள். இப்போது அவர்கள் எப்போது வீட்டுக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு 3 குழந்தைகள், 7 பேரக்குழந்தைகள், 14 கொள்ளு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள், எனவே பெரிய குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here