இதுதொடர்பாக எத்தனை விழிப்புணர்வு செய்யப்பட்டாலும், புகை பிடிக்கும் மன்னர்களோ விளம்பரம் செய்பவர்கள் அதனை செய்யட்டும், நாம் நம்முடைய பணியை தொடர்வோம் என தொடர்ந்து புகைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு மட்டுமல்ல தங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நோயினை பரப்புகிறார்கள் ஒரு கொரோனா தொற்று நோயாளியை போன்று. என்ன கொரோனா தொற்று நோயாளி போன்றா? என்ற கேள்வியை கோபமாக கேட்கலாம். ஆனால், உண்மை அதுதான்.
கொரோனா நோயாளி முக கவசம்அணியாமல் தும்மினாலோ, இருமினாலோ வைரஸ் சுற்றியிருப்பவர்களை தாக்கும். இது, சில நேரங்களில் அவர்களுக்கு தெரியாமல்கூட நடந்துவிடலாம். ஆனால், புகை பிடிப்பவர்கள் அவ்வாறு சொல்ல முடியாது. நம்மை சுற்றியிருக்கும் சிறுவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் என அறிந்தும், புகைப்பவர்கள் நோயினை பரப்பி வருகிறார்கள். இதுபோக மற்றொரு ஒற்றுமையும் இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிரை குடித்துவரும் கொரோனா வைரஸ், மனித உடலில் தாக்குதல் நடத்தும் பகுதி நுரையீரலாகும். வாய், மூக்கு வழியாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் மனித செல்களுக்குள் நுழைந்து சுவாச மண்டலம் வாயிலாக நுரையீரல் பகுதிக்கு செல்கிறது. அங்கு அடைகாத்து தன்னுடைய எண்ணிக்கையை அதிகரித்து நுரையீரலில் தொற்றை ஏற்படுத்தி நிமோனியாவால் மனிதர்களை கொல்கிறது.
புகை பிடிப்பதிலும், புகைப்பவர்கள் மற்றும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். என்ன ஒன்று கொரோனா உடனடியாக தீவிரத்தை காட்டுகிறது. புகை காலதாமதமாக தீவிரத்தை காட்டுகிறது. இப்படியிருக்கையில், தன்னுடைய நண்பனை விட்டு விலகிச்செல்ல கொரோனா வைரஸ் விரும்புமா என்ன?.
புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்தா? என்ற கேள்விக்கு யோசிக்க சிறிது நேரம்கூட எடுக்காமல் ‘ஆம்’ என்று உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் பதில் அளிக்கிறார்கள். இதில் மற்றொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. அதாவது, நான் எப்போதாவதுதான் சிகரெட் புகைப்பேன் என்று கொரோனாவிற்கு ‘டிமிக்கி’ கொடுக்க முடியாது என்பதுதான்.
புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் அதிக ஆபத்தில் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாக அதிகமாகவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், விரல்களில் சிகரெட்டுகளை வைத்துக்கொண்டு வாய் பகுதிக்கு கொண்டு செல்வதால், வைரஸ் கையிலிருந்தால் வாய்க்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் புகை பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் நோய் இருக்கலாம் அல்லது அதன் செயல்திறன் குறைந்து இருக்கலாம். இது நோய்க்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும்” எனக் கூறியுள்ளது.
“புகை பிடிப்பவர்களின் சுவாச மண்டலத்தில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருக்கும். எப்போதாவதுதான் புகைப்பேன் என்பவர்களும் இதில் தப்பிவிட முடியாது. ஏனென்றால், அவர்களுடைய சுவாச மண்டலும் பாதிப்பை சந்தித்திருக்கும். உங்கள் சுவாச மண்டலம் ஏற்கனவே சேதமாகியிருக்கும்போது கொரோனா வைரஸ் ஆபத்து என்பது தொடர்ச்சியாக அல்லது அவ்வப்போது புகைப்பவர்களுக்கு சமமாகவே உள்ளது. புகை பிடிப்பவர்கள் அதனை கைவிட இதுவே சிறந்த நேரமாகும். குறைந்தபட்சம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வரையிலாவது அப்பழக்கத்தை நிறுத்துங்கள்” என இந்திய சுவாசப்பிரிவு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் புகை பிடிக்காதவர்களை காட்டிலும், புகை பிடிப்பவர்கள் கடுமையான அபாயத்தில் உள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கிய பிப்ரவரியில் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன்” இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில், சீனாவில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 1099 கொரோனா தொற்று நோயாளிகளில் 173 பேருக்கு மிகவும் கடுமையான பாதிப்பு இருந்தது. அவர்களில் 16.9 சதவீதம் பேர் தற்போதைய புகை பிடிப்பவர்கள் என்றும், 5.2 சதவீதம் பேர் புகை பிடித்தலை கைவிட்டவர்கள். இரண்டாவதாக கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நோயாளிகளில் 11.8 சதவீதம் பேர் தற்போதைய புகை பிடிப்பார்கள் என்றும் 1.3 சதவீதம் பேர் புகைபிடிப்பதை கைவிட்டவர்கள்.
கவலைப்படக்கூடிய விஷயமாக சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களில் 25.5 சதவீதம் பேர் அப்போது புகைபிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தவர்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ் பரவலின்போதும் புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகை பிடித்தவர்கள் தொற்றுநோய்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. மெர்ஸ் வைரஸ் பரவிலின்போது தென் கொரியாவில் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாதிக்கப்பட்ட புகைபிடித்த நோயாளிகள் உயிர்தப்பிய எண்ணிக்கை குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் மயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் ஜே. டெய்லர் ஹேஸ் பேசுகையில், “சீனாவில் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் புகை பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர்” எனக் கூறுகிறார். தற்போது இச்செய்தியை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் புகைபிடித்தால், அதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள்; உங்களுக்கு தெரிந்த யாராவது புகைபிடித்தால் அவர்களையும் தடுத்து நிறுத்துங்கள்.
“ஒரு குறுகிய காலத்திற்கு புகை பிடிப்பதை விடுபவர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, கடுமையான நுரையீரல் பாதிப்பு இல்லாத பெரும்பாலான புகை பிடிப்பவர்கள் அதனை நிறுத்தினால் உடல்நலத்தில் முன்னேற்றங்களை காண்பார்கள். மேலும், கொரோனா வைரஸ் உள்ளிட்ட கடுமையான வைரஸ் தொற்றுக்கு வாய்ப்பு குறையும்” எனக் ஜே. டெய்லர் ஹேஸ் கூறியுள்ளார்.
புகை பிடித்தலை கைவிடும் திட்டத்தை மேற்கொள்ளும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா புற்றுநோய் கவுன்சில், “புகை பிடிப்பதை நிறுத்துவது சில மாதங்களுக்குள் உங்கள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் உடல்நலத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால் புகைப்பிடிப்பதை நிறுத்துவதாகும்” என்கிறது. உங்களையும், உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் புகை பிடித்தலை கைவிட கொரோனா வைரஸ் பரவும், இந்த காலத்தைவிட சிறந்த காலம் இருக்க முடியாது. புகை பிடித்தலை கைவிட்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.