9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்

  • நாட்டுமக்கள்அனைவரும் ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து விட்டு டார்ச், அகல்விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடில்லி:கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவோரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வருகிறது. 

இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடுகிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக விளங்கியது. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன.

ஊரடங்கு காரணமாக 130 கோடி மக்கள் வீடுகளுக்குள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். உற்சாகமாக இருந்து வைரசை  வெற்றி கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் விளக்கை அணையுங்கள். மின் விளக்குகளை அணைத்துவிட்டு  அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளில் ஒளியேற்றவேண்டும். டார்ச், செல்போன் டார்ச் மூலமாகவும் ஒளியேற்றலாம். விளக்கேற்றும்போது அமைதியாக இருந்து நாட்டு மக்கள் குறித்து சிந்தியுங்கள். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்  என்று  அவர் பேசினார்.

இதேபோல் 22ம் தேதி மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தபோது,  அன்று மாலையில் அனைவரையும் கைதட்டி மருத்துவப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும்படி கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here